Sunday, July 20, 2014

...என்றார் சூஃபி - part7

30

இன்றைய கூட்டத்தில் சூஃபி பின்வரும் சிறிய கதையைச் சொன்னார்:
“குடிசை வீட்டில் ஒருவன் வாழ்ந்து வந்தான். வறுமை அவனை விட்டு அகலவே இல்லை. அந்தச் சிறிய குடிசையை மராமத்துச் செய்வதற்குக் கூட அவனிடம் பணம் இல்லை. காற்றிலும் மழையிலும் அது நைந்து கந்தலாகிப் போயிருந்தது. அதன் மண்-சுவர் இற்றுப் போயிருந்தது.

அவனது குடிசைக்கு எதிரே, சாலையின் அந்தப் பக்கமாக, பெரிய மச்சுவீடு ஒன்று இருந்தது. கொடுத்து வைத்த சீமான் ஒருவரின் இல்லம். அதைப் பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது. ‘ச்சே! என்ன வாழ்க்கை இது? இப்படி தரித்திரம் பிடித்து என்னை ஆட்டி வைக்கிறதே. கண் முன்னே இத்தனைப் பெரிய வீட்டில் ஒருத்தன் வாழ்கிறான். அதுவல்லவா வாழ்க்கை? இந்தக் குடிசையில் மழைக்குப் பாதுகாப்பு உண்டா? வெய்யிலுக்கு மறைப்பு உண்டா? என்றைக்காவது ஒரு நாள் அந்த வீட்டுக்குள் இருந்து பார்க்க வேண்டும்’ என்று அவன் தன் மனதிற்குள் அடிக்கடி எண்ணிக் கொள்வான். அது ஒரு சங்கற்பமாகவே அவனுக்குள் உருவாகியிருந்தது.

காலம் இப்படியாகச் சென்று கொண்டிருக்க ஒருநாள் அதிகாலையில் அந்த ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்தார்கள். இவனும் குடிசையை விட்டு வெளியே வந்தான். எதிர் வீட்டுச் சீமான் தனது மனைவி மக்களோடு வீட்டைத் திறந்தபடிப் போட்டுவிட்டு வெளியே ஓடுவதைப் பார்த்தான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் மனம் பரபரத்தது. ‘லூசுப்பய. இத்தனைப் பாதுகாப்பான வீட்டை விட்டு ஓடுகிறானே. இந்தக் குடிசைக்குள் இருந்து இனியும் நான் சாகவேண்டியதில்லை’ என்று நினைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிர்வீட்டிற்குள் – அழகான பங்களாவிற்குள் – நுழைந்தான். நிலநடுக்கத்தில் அவனது குடிசை தரைமட்டமானது. ஆனால், அதே சமயம் பங்களாவும் படுத்துவிட்டது. அவன் அதற்குள் அப்படியே சமாதி ஆகிவிட்டான்.”

இக்கதையின் மீது நாங்கள் சற்று நேரம் சிந்தனை செலுத்திக் கொண்டிருந்தோம்.
“காதலின் புயலால் கந்தலாகிக் கண்ணீர் கசியும் இதயம் உள்ளவர்களே! உங்கள் தன்முனைப்பு தரைமட்டமாகும் தருணத்தில் தப்பியோட நினைக்காதீர்கள்.” என்றார் சூஃபி.

31

சூஃபி கூறிய இன்னொரு சிறிய கதை:

“அடர்ந்து செழித்த ஒரு காட்டிற்குள் வாலிபன் ஒருவன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். உலக வாழ்க்கையின் சராசரித் தன்மையை வெறுத்து ஆனந்த மயமான ஏகாந்தமான வாழ்க்கையைத் தேடி அவன் அந்தக் காட்டிற்குள் ஓடிவந்திருந்தான். ’இயற்கையின் மடியில் இனி நானொரு குழந்தை. பறவைகளும் விலங்குகளுமே எனது உறவுகள். கைகளைப் போல் நீட்டியிருக்கும் மரக்கிளைகளில் எல்லாம் இறைவன் எனக்குச் சுவையான உணவை அள்ளித் தருகிறான். என் வாழ்வில் இனி துன்பமே இல்லை’ என்றெல்லாம் எண்ணியபடி அவன் காட்டுக்குள் குஷாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். 
அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காட்டாற்றின் கரையில் இரண்டு மரங்களை அவன் கண்டான். ஒரு மரத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பளபளப்பாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு மரத்தில் முட்கள் மண்டிய கிளைகளுக்கு இடையில் சொறி பிடித்தது போன்ற கனிகள் இருந்தன. அவனுக்குப் பசியாக இருந்தது. கண்ணைக் கவர்ந்த அந்த அழகிய கனிகளை அவன் முகர்ந்து பார்த்தான். அதன் மணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இன்னொரு மரத்தின் கனியிலும் ஒன்றைப் பறித்து முகர்ந்து பார்த்தான். அதன் துர்நாற்றம் வயிற்றைப் பிரட்டியது. அதை வெறுப்போடு வீசி எறிந்தான். பிறகு முதல் மரத்தின் அழகிய கனியை ஆர்வத்தோடு புசித்தான். அதன் சுவை வருணிப்புக்கு எட்டாததாக இருந்தது. சொர்க்கத்தின் கனியே கிடைத்துவிட்டது என்பது போல் அவன் மகிழ்ந்து இன்னும் நான்கைந்து கனிகளைத் தின்று விட்டு அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் உடலெல்லாம் நீலம் பாய்ந்து வாயில் நுரை தள்ளி மல்லாந்து விழுந்து மரணித்துவிட்டான்.


சிறிது நாட்கள் கழிந்தன. மூலிகை வைத்தியன் ஒருவன் தன் மகனுடன் அந்தக் காட்டிற்குள் வந்தான். தனது குல வித்தையைத் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக. செடிகள் கொடிகள் அவற்றின் இலைகள் வேர்கள் காய்கள் கனிகள் இவற்றின் தன்மைகளை எல்லாம் தன் மகனிடம் சொல்லிக் கொண்டே வந்தான். காட்டாற்றின் ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் கிடந்த அந்த வாலிபனின் பிணத்தை அவர்கள் கண்டார்கள். உடலெல்லாம் விஷம் பாய்ந்து அவன் செத்துப் போயிருப்பது தெரிந்தது. அவனுக்கு அருகில் சொறிப்பழம் ஒன்று கிடந்தது.

அதைப் பார்த்துவிட்டு மகன் தந்தையிடம், ‘அப்பா! இவன் அந்தச் சொறிப் பழத்தை உண்டதால் விஷம் பாய்ந்து இறந்து போயிருக்கிறான் என்று நினைக்கிறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

தந்தை அவனிடம் சொன்னான், ‘நீ நினைப்பது தவறு மகனே. கீழே கிடப்பது அவன் சாப்பிடாமல் போட்டுவிட்ட பழம். அது சொறி பிடித்தது போல் இருப்பதாலும் துர்நாற்றம் அடிப்பதாலும் அது விஷப் பழமாக இருக்கலாம் என்று நினைத்தே அவன் அதை உண்ணாமல் போட்டுவிட்டான். அவன் சாப்பிட்டது, இதோ, இந்த மரத்தின் பழம். இது பார்க்க அழகாகவும் மணமாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் இப்பழம் கொடிய விஷம்.”

இதைக் கேட்ட மகன் தன் தந்தையிடம், ’அப்படியானால் இதற்கு விஷ முறிவு ஏதேனும் உண்டா அப்பா?’ என்று கேட்டான்.

’நிச்சயமாக. அவன் சாப்பிடாமல் கீழே போட்டிருக்கிறானே, அந்தச் சொறிப் பழம்தான் இந்த பழத்தின் விஷத்திற்கான முறிவு. அதை அவன் ஒரே ஒரு கடி சுவைத்திருந்தால் போதும். இந்த விஷமெல்லாம் முறிந்து போயிருக்கும். அத்தனை வீரியமானது அது’ என்று வைத்தியன் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.”

இந்தக் கதை ஏன் சொல்லப்பட்டது என்று நான் சிந்தனை செய்திருந்தேன். அமுதம் என்று நினைத்தது விஷமாகவும், விஷம் என்று நினைத்தது அமுதமாகவும் இருந்து விடலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது என்று விளங்கினேன்.

அப்போது, “அன்பர்களே! ஆன்மிகம் என்பது ஒரு பெருங்காடு. அதில் நுழைந்து கண்ணில் கண்டதையெல்லாம் ருசிக்கலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதில் விஷக் கனிகளும் உண்டு. எதை உண்ணலாம் எதைத் தொடவும் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வழிகாட்டி – ஞான குரு – மிகவும் அவசியம்” என்றார் சூஃபி.

32


மாதுளம்பழம் பற்றிய பிரபலமான நபிமொழியைச் சொல்லிக் கொண்டிருந்தார் சூஃபி: “மாதுளம்பழம் சொர்க்கத்தின் பழங்களில் ஒன்று. இங்கே பூமியில் விளையும் மாதுளம் கனிகளிலும் ஒவ்வொரு கனிக்குள்ளும் சொர்க்கத்தின் ஒரு விதை உண்டு. அது எது என்று நமக்குத் தெரியாது. எனவே, எவர் ஒருவர் முழுமையாக ஒரு மாதுளங்கனியை உண்பாரோ அவர் சொர்க்கத்தின் ஒரு துளியை ருசித்தவராவார்.

இது நபி(ஸல்) அவர்கள் கூறிய அருள்மொழி. சரி, ஒரு மாதுளம்பழத்தின் விதைகளில் எது சொர்க்கத்திலிருந்து வந்த ஒன்று என்பது நபிக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். அவர்களின் அகப்பார்வைக்கு அது சிரமமான காரியம் அல்ல. இதுதான் அந்தச் சொர்க்கத்தின் துளி என்று அவர்கள் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால் அவர்கள் சொன்னது நம் போன்ற சராசரி மனிதர்களுக்காக.”

இவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஒரு சாதகர் கேள்வி கேட்டார்: “மகானே! இப்போதெல்லாம் மாதுளம்பழம் வாங்கி வந்து உடைத்துப் பார்த்தால் அதற்குள் பல விதைகள் அழுகிக் கிடக்கின்றனவே. அந்த அழுகிய விதையில் சொர்க்கத்தின் துளியும் போய்விட்டால் என்ன செய்வது?”

“ஏன் இந்தச் சந்தேகம்? அழுகாத விதைகள் உள்ளன அல்லவா? சொர்க்கத்தின் துளி அதில் இருக்கும். ஏனெனில், சொர்க்கத்தின் துளி அழுகாது!” என்றார் சூஃபி.

(சில சமயங்களில் யாருமே சாப்பிடாமல் முழு மாதுளம்பழமும் அழுகி விடுகிறதே. அப்போது அதிலிருக்கும் சொர்க்கத்தின் துளி என்னவாகும்? என்று என் மனதிற்குள் ஒரு கேள்வி உதித்தது. நான் அதை சூஃபியிடம் கேட்கவில்லை.)

”இந்த மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே, அதுவும் ஒரு மாதுளங்கனிதான். சொர்க்கத்தின் துளி போன்ற புனிதர் எவராது இங்கே அவசியம் இருப்பார். அவர் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அந்த சொர்க்கத் துளி இவராக இருக்கக் கூடும் என்று பார்த்து மதிப்பளிக்க வேண்டும். “உங்களில் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்” (வ லா தல்மிஸூ அன்ஃபுஸ(க்)கும் -49:11) என்று குர்ஆன் சொல்கிறது. இதற்கு ஹழ்றத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கொடுத்த விளக்கம்: ‘அடுத்தவரின் குறைகளைத் துருவித் திரிவதில் நேரத்தைப் போக்காதீர்’ என்பதே.


எனினும், ஒரு ஜும்மா தொழுகையின் போது, இன்னின்ன மனிதர்கள் நயவஞ்சகர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி எழுப்பி விட்டார்களே! அதுபோல், அகப்பார்வை கொண்ட மனிதருக்கு அழுகிய விதைகள் அடையாளம் தெரிந்தால் அது வேறு. சாதகர்கள், எல்லா நபர்களையும் சொர்க்கத் துளிகளாகவே காண வேண்டும். அகப்பார்வை பெற்ற ஞானிகளுக்கு உண்மையான சொர்க்கத் துளிகள் யார் யார் என்று அடையாளம் தெரியும்.” என்றார் சூஃபி.

Wednesday, July 9, 2014

தூக்கத்தை விடவும்...


வைகறை நேரத் தொழுகைக்கு ஒலிக்கும் அழைப்பில் மட்டும் சிறப்பாக ஓதப்படும் வரி: “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்”

“தொழுகை தூக்கத்தை விடவும் மேலானது” என்பது இதன் பொருள்.

இது ஏன்? என்பதை நாம் அறிய வேண்டும்.

“தூக்கத்தில் மனிதன் இறைவனை மறந்திருக்கிறான். ஆனால் தொழுகையில் இறைவனை நினைக்கிறான். அதனால் தூக்கத்தை விடவும் தொழுகை மேலானது ஆகிறது. ஆனால், எவனது தொழுகையில் இறை நினைவு இல்லையோ அவனின் தொழுகை தூக்கத்தை விடவும் கீழானதுதான்.” என்று குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

இன்னொரு கோணத்தில் இன்னொரு விளக்கத்தை நாம் அடைகிறோம். அது நம் மூளையின் இயக்கம் சம்பந்தப் பட்டது.

தூக்கத்திலும் விழிப்பிலும் நம் மூளை ஒரே நிலையில் இருப்பதில்லை. அதன் இயக்கம் நமது பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உண்மையில் மூளையின் செயல்பாடுகளையே நாம் “மனநிலை” என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். “மனம் (Mind) என்பதை அளந்து ஆராய்ந்து அறிய உடலில் நமக்குக் கிடைத்திருக்கும் கருவி மூளைதான்” என்கிறார் தீபக் சோப்ரா.

மூளையின் அதிர்வுகளை அளக்கும் முறை Electro Encephalo Gram (EEG) எனப்படுகிறது. அதன் கணக்குப்படி மூளையின் அல்லது மனத்தின் நிலைகளை மருத்துவ விஞ்ஞானிகள் இப்படிப் பட்டியலிடுகிறார்கள்:

காம்மா நிலை: நொடிக்கு 30 அதிர்வுகளுக்கும் மேல். இந்நிலை சிந்தனை வயப்பட்ட நிலையில் இருப்பது.

பீட்டா நிலை: நொடிக்கு 15 முதல் 30 அதிர்வுகள். இந்நிலை விழிப்பு சுதாரிப்பு ஆகியவற்றில் இருப்பது.

ஆல்ஃபா நிலை: நொடிக்கு 9 முதல் 14 அதிர்வுகள். இந்நிலை நிம்மதி ஓய்வு அமைதி தியானம் ஆகியவற்றில் இருப்பது.

தீட்டா நிலை: நொடிக்கு 4 முதல் 8 அதிர்வுகள். இந்நிலை கனவுள்ள உறக்கம் ஆழ்ந்த ஓய்வு ஆழ்நிலை தியானம் ஆகியவற்றில் இருப்பது.

டெல்டா நிலை: நொடிக்கு 1 முதல் 3 அதிர்வுகள். இந்நிலை கனவில்லா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது.

அதிகமாகச் சிந்திப்பதில் மூளை ஏன் விரைவாகச் சோர்வடைகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், தியானம் என்பது சிந்திப்பது அல்ல என்பதும் இப்போது தெரிகிறது அல்லவா?

அதிகமாகச் சிந்திப்பவர்களே அறிவாளிகள் அல்லது சிறந்த கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, மெய்ஞ்ஞானிகளாக இருப்பார்கள் என்று நாம் நினைத்து வந்திருக்கிறோம். இதிலோ தியானம் என்பது அல்ஃபா அல்லது தீட்டா நிலையாகவும் சிந்தித்தல் என்பது காம்மா நிலையாகவும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு முரணாகத் தோன்றலாம்.

நியூராலஜி (மூளையியலின்) ஆராய்ச்சிக் கண்டறிதல்கள் வேறு விதமாகச் சொல்கின்றன. அதிகமாகச் சிந்திப்பது ஒருபோதும் உங்களை மேனிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்று அவை கூறுகின்றன. மூட்டை நிறைய செல்லாத பணம் வைத்திருப்பவன் எப்படிப் பணக்காரன் அல்லவோ அதே போல். மாறாக மில்லியன் ரூபாய்க்கு ஒரு கிரெடிட் கார்ட் வைத்திருப்பவனைப் போல் ஆழமான அமைதியான மனநிலை உள்ளவர்களே மேனிலை அடைகிறார்கள்.

“மேதைகள் எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்னும் பொதுக் கருத்துக்கு மாறாக அவர்களின் மனம் சராசரியை விடவும் அமைதியாகவும் தெளிவாகவும் உள்ளது” என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.(நூல்: How To Know God, chapter #5: Strange Powers / Geniuses, Child Prodigies and Savants, p.222)

இஸ்லாம் என்றால் அமைதி வழி என்று பொருள். சலாம் என்றால் அமைதி என்று அர்த்தம். எனில், அந்த அமைதி வழியின் தொழுகை என்பது அமைதி நிலையில் நிகழ்வதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது தொழுகை என்பது ஆல்ஃபா நிலையில் அல்லது தீட்டா நிலையில் நிகழ்வதாக இருக்க வேண்டும்.

தொழுகைக்காக நீரால் அங்கசுத்தி (ஒளூ) செய்துகொள்கிறோம். மனதிற்குச் செய்யும் ’ஒளூ’ (Ablution) என்பது என்ன? உங்கள் மூளையின் அதிர்வுநிலையை ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் வைப்பது என்று சொல்லலாம்.

தியானம் என்பதிலும் உறக்கம் என்பதிலும் மூளை ஒரே அதிர்வு நிலையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியானால் உறக்கமும் தியானமும் ஒன்றுதானா? அல்லது இரண்டும் எப்படி வேறுபடுகின்றன? என்று கேட்கலாம். இரண்டையும் வேறுபடுத்துவது சுதாரிப்பு (alertness) அல்லது பிரக்ஞை (consciousness) ஆகும்.

”உறக்கத்தில் சுதாரிப்பு அல்லது பிரக்ஞை இல்லை. ஆனால் ஓய்வுநிலை (relaxation) இருக்கிறது. தியானத்தில் அதே ஓய்வுநிலையுடன் பிரக்ஞையும் இருக்கிறது” என்பார் ஓஷோ.

உறக்கத்தை விடவும் தொழுகை மேலான நிலை ஆவது இப்படித்தான். அதாவது உறக்கத்தின் ஓய்வு நிலையுடன் பிரக்ஞையும் இருக்கும் நிலையே தொழுகைக்கான நிலை. ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் இருந்து பிசகி உங்கள் மூளை பீட்டா அல்லது காம்மா நிலைக்குப் போய்விடும் எனில் நீங்கள் தொழுகையில் இல்லை என்று சொல்லிவிடலாம்!
விழிப்பிலும் தூக்கத்தின் முழுமையான ஓய்வு நிலையில் இருப்பது என்பது சாத்தியமா? என்று ஐயம் வருகிறதா? நம் மூளையோ தூக்கத்தில் கூட ஓய்வாக இருப்பதில்லை அல்லவா?

தொழுகையில் மட்டுமல்ல, விழித்திருக்கும் நேரம் முழுவதும் இதே ஓய்வு நிலையில், ஆனால் பிரக்ஞையுடன், இருப்பவர்கள் உண்டு. அதாவது ஐவேளை தொழுகைக்கு வெளியிலும் தொழுகையின் ‘நிலை’யில் இருப்பவர்கள் உண்டு.

”தம் தொழுகையின் மீது (எப்போதும்) நிலைத்திருப்போர்” (அல்லதீனஹும் அலா சலாத்திஹிம் தாயிமூன் – 70:23)

”ஞானத்தின் தலைவாசல்” என்று சூஃபிகள் போற்றும் ஹழ்றத் அலீ (ரலி) அத்தகைய நிலையில் உன்னதமான படித்தரத்தை அடைந்தவர்கள். அன்னாரின் தொடையில் அம்பு தைத்தபோது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தோழர்கள் அந்த அம்பினை உருவி எடுத்தார்கள்! அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஓய்வு நிலை. ஆனால் முழுமையான விழிப்புணர்வுடன்!

இத்தகைய நிலையில் இருக்கும் மனிதர்கள் யார்? அவர்கள் அந்த நிலையை எப்படி அடைந்தார்கள்? என்பதைப் பார்க்கலாம்.

மனிதனின் மனத்தை சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் என்று அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கூறலாம். என்ன ஆகுமோ என்னும் அச்சம். இப்படி ஆகிவிட்டதே என்னும் கவலை. இப்படி ஆகிவிடுமோ என்னும் அச்சம். இப்படி ஆகவில்லையே என்னும் கவலை. இவ்விரு விஷயங்களை விட்டும் விடுதலை அடைந்த ஒரு கூட்டத்தை குர்ஆன் அடையாளம் காட்டுகிறது:

”அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஃகவ்ஃபுன் அலைஹி வ லா ஹும் யஹ்ஸனூன் -10:62)

அவர்களின் மனத்தை மட்டும் அச்சமும் கவலையும் தீண்டாதது எப்படி என்று கேட்கலாம்.
அவர்கள் கடவுளை அடைந்தவர்கள். தம் உள்ளே கடந்து கடவுளை அடைந்தவர்கள். இறைவனைத் தம் இதயத்தில் குடி வைத்தவர்கள்.


இறைவனை அச்சமும் கவலையும் தீண்டுவதில்லையே!

Thursday, May 22, 2014

யாதும் ரோஜாவின் பெயரும் -part 2

தனது இளமைப் பருவ நினைவுகளாக தாந்தே எழுதிய ’லா வைட்டா நுவோவா’ மற்றும் அவரது காவியமான டிவைனா காம்மெடியா ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கும்போது பீட்ரிஸின் தரிசனம் ஏசுநாதரின் தரிசனத்திற்கு ஒரு முன்னோட்டம் என்பதாகவே தாந்தேவின் கிறித்துவ மனம் உருவகித்துக் கொண்டதை உணரலாம். இதுதான், பீட்ரிஸ் தியானத்தில் இருப்பது போல் காப்ரியல் ரோசெட்டி வரைந்த ஓவியத்தில் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தோரணையின் விளக்கம். அதாவது அந்தத் தோரணை ஏசுநாதருக்குரியது. (“And it came to pass in those days, that he went out into a mountain to pray, and continued all night in prayer to God.” –Luke 6:12 போன்ற பைபிள் வசனங்களுக்கு ஐரோப்பிய செவ்வியல் ஓவியர்கள் வரைந்துள்ள சித்திரங்களில்.)

இவ்வாறு உருவகித்துக் கொள்வது தாந்தேயுடன் நிற்கவில்லை. பல கிறித்துவக் கவிஞர்கள் மற்றும் கலைஞர்களிடம் இஃது ஒரு கலை மரபாகவே வளர்ந்து வந்துள்ளதைக் காணவியலும். பீட்ரிஸ் மீது தான் எழுதிய கவிதைகளின் அடையாளங்களை மறைக்க தாந்தே வேறொரு பெண்ணைத் திரையாகப் பயன்படுத்தினார். அதே போல் காப்ரியேல் ரோசட்டி ’பீட்ரிஸ்’ என்னும் பாத்திரத்தைத் திரையாகப் பயன்படுத்திக் கொண்டு ஜேன் மோரிஸை அவ்வாறு உருவகித்திருக்கிறார் என்று சொல்லலாம். மேற்கத்திய மறுமலர்ச்சிக் கால  ஓவியங்களைக் கூர்ந்து படிக்கும்போது பின்வரும் அவதானங்களைப் பெறுகிறோம்:

1.   ஏசுநாதருக்கு உரிய லட்சணங்களில் பெண் சித்திரிக்கப்படுதல். (காப்ரியேல் ரோசட்டியின் பீட்ரிஸ் போர்ட்டினாரி தியான ஓவியம்.)

2.   பெண்ணாக ஓவியர் தன்னைச் சித்திரித்து வைத்தல். (லியோனார்டோ டாவின்சி தன் முகத்தையே ’மோனா லிசா’வாக வரைந்தது போல்.)


3.   மேரி மக்தலீனா முகத்திற்குத் தன் உருவத்தை மாதிரியாக்கி வரைதல் ( பெருகீனோ வரைந்த “Mary Magdalene”, சவோல்டோ வரைந்த “Mary Magdalene”)
perugino's mary magdalene and perugino

4.   கன்னி மேரி முகத்திற்குத் தன் உருவத்தை மாதிரியாக்கி வரைதல் ( பெருகீனோ வரைந்த “Madonna and Child”, ரஃபேல் வரைந்த “Sistine Madonna”)
perugino's madonna and child (detail) and perugino

5.   பெண்ணுடையில் ஏசுவைச் சித்தரித்தல் (லியோனார்டோ டாவின்சியின் ‘Christ as Salvator Mundi’ ஓவியம்.)


6.   ஏசுவின் ஓவியத்திற்குத் தன் உருவத்தையே மாதிரியாக்கி வைத்தல் (வின்சென்ட் வான்கா வரைந்த ‘Pieta’, பால் காகின் வரைந்த ‘Self-portrait as Christ in the garden of Olives’, க்ரனாக் வரைந்த ‘Woodcut of Christ’s Head’, ஆல்ப்ரெச் ட்யூரர் வரைந்த ‘Self Portrait as Christ’, ஹான்ஸ் ஹோல்பைன் வரைந்த ‘The Body of the Dead Christ in Tomb’, மான்டெக்னா வரைந்த ‘Ecce Homo’, ரெம்ப்ரான்ட் வரைந்த “Crucifixion”, டிடியன் வரைந்த “Christ Blessing”, “Christ Flagellated”, “Noli Me Tangere”, “The Tribute Money”, வான் டைக் வரைந்த “Resurrection”  போன்ற ஓவியங்கள்)
titian's "christ blessing" (detail) and titian

(குறிப்பு: சைமன் ஆப்ரஹாம்ஸ் என்பாரின் http://www.everypainterpaintshimself.com என்னும் இணைய தளத்தில் மேற்சொன்ன ஓவியங்கள் இந்தக் கோணத்தில் அலசப்பட்டுள்ளன.)

இந்தக் குறியீட்டாக்கம் எதற்காக என்று யோசித்துப் பார்க்கையில் ஏசுவை நெருங்குதல் மற்றும் ஏசுவில் தன்னை அழித்தல் (ஃபனா ஃபில் ஈசா) ஆகிய நிலைகளை அடைவதற்கான தியானமாகக் கலையைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்று விளங்குகிறது.
பீட்ரிஸ் தன் மீது ஏற்படுத்திய ஆழமான அகத் தாக்கத்தைப் பற்றி தாந்தே விளக்கும் வரிகளைப் படிக்கும்போது, அவருக்குப் பின் ஆறு நூற்றாண்டுகள் கழித்து அதன் சாயலை, தாக்கத்தை இன்னொரு ஆளுமையின் வரிகளில் காண்கிறேன்.
அவர் லெபனான் தேசத்தின் மகாகவி கலீல் ஜிப்ரான். அவர் தனது இளமைக் கால அனுபவங்களாக எழுதிய ’Broken Wings’ (‘முறிந்த சிறகுகள்’) நூலின் முன்னுரை பின்வருமாறு ஆரம்பமாகிறது:
“காதல் தன் மந்திரக் கிரணங்களால் எனது கண்களைத் திறந்து, தன் வலிய விரல்களால் என் உயிரை முதன் முதலில் தீண்டியபோது எனக்குப் பதினெட்டு வயது. தன் அழகால் என் ஆன்மாவை விழிப்படையச் செய்த முதல் பெண் சல்மா கராமி. உயர்ந்த நேசத்தின் தோட்டத்திற்கு அவள் என்னை அழைத்துச் சென்றாள். அங்கே என் பகல்கள் கனவுகளைப் போன்றும் இரவுகள் திருமணங்களைப் போன்றும் கழிந்தன.
அழகை வழிபட சல்மா கராமியே தன் சொந்த அழகின் முன்மாதிரி கொண்டு எனக்குக் கற்பித்தாள்; அவளின் அரவணைப்பால் காதலின் ரகசியத்தை வெளிப்படுத்தினாள்; உண்மையான வாழ்வின் கவிதையை என்னிடம் முதலில் பாடியவள் அவளே.
சல்மாவின் உதடுகள் வழியே காதல் என் காதில் உச்சரித்ததை நான் கேட்டபோது மிகவும் ஆழமான சிந்தனையிலும் தியானத்திலும் மூழ்கி வேதங்களின் இயல்பு மற்றும் வெளிப்பாடுகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள நான் முயன்றேன். ஒளித்தம்பம் போல் சல்மா என் முன் நிற்பதை நான் பார்த்தபோது சுவர்க்கத்தில் முதலில் ஆதமின் வாழ்க்கை இருந்ததைப் போல் என் வாழ்க்கை வெறுமையாக இருந்தது. அவள் என இதயத்தின் ஏவாள். அதனை அவள் ரகசியங்களாலும் அற்புதங்களாலும் நிரப்பி வாழ்வின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்ளும்படிச் செய்தாள்.”
தன் இளம் காதலியைப் பற்றிச் சொல்லுமிடத்தில் ஆதம்-ஹவ்வா பற்றி ஜிப்ரான் சொல்லியிருப்பது ’செல்மா’வின் ஆளுமையை அவர் எத்தகைய பெண்ணியப் படிவத்தில் (female prototype) வைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து அவர் எழுதுகிறார்:
“முதல் ஏவாள் தனது நாட்டத்தால் ஆதமை சொர்க்கத்திலிருந்து வெளியே அழைத்து வந்தாள். ஆனால் சல்மா தன் இனிமையாலும் காதலாலும் தூய நேசம் மற்றும் நற்குணத்தின் சொர்க்கத்திற்குள் என்னை இட்டுச் சென்றாள்.”
தாந்தேவுக்கு பீட்ரிஸுடன் திருமணம் நடைபெறவில்லை. அவள் வேறொரு செல்வந்தனுக்கு மனைவி ஆனாள். சிறிது காலத்திலேயே இறந்தும் போனாள். அவளின் இறப்பிற்குப் பின்னர் தன் காதலின் அனுபவங்களை ‘லா வைட்டா நுஓவா’ என்னும் நூலாக அவர் எழுதினார். ஜிப்ரானின் கதையும் இதுவே. மன்சூர் பே காலிப் என்னும் செல்வந்தனுக்கு சல்மா மனைவியாகி முதல் பிரசவத்தில் இறந்துபோகிறாள். அவளின் இறப்பிற்குப் பின் ஜிப்ரான் ‘முறிந்த சிறகுகள்’ என்னும் நூலை எழுதுகிறார். அதன் முன்னுரையில் அவர் சொல்கிறார்:
“முதல் மனிதனுக்கு ஏற்பட்டதே எனக்கும் ஏற்பட்டது. ஆதமை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய உக்கிரமான வார்த்தை தனது ஒளிரும் முனையால் என்னை அச்சுறுத்தி, எந்தக் கட்டளையையும் நான் மீறவோ அல்லது விலக்கப்பட்ட கனியை நான் புசிக்கவோ இல்லாத நிலையிலும் என் காதலின் சுவர்க்கத்திலிருந்து என்னைக் கட்டாயமாக வெளியேற்றியது.
இன்று, பல ஆண்டுகள் கடந்த பின், அரூபச் சிறகுகளாய் என்னைச் சுற்றி அசைவதும் என் இதயத்தின் ஆழங்களைத் துன்பத்தால் நிறைப்பதும் என் கண்களில் கண்ணீரை வரவைப்பதுமான் வலிமிகு நினைவுகளைத் தவிர அந்த அழகிய கனவிலிருந்து என்னிடம் மிச்சம் வேறெதுவும் இல்லை. என் காதலி சல்மா இறந்துவிட்டாள். எனது உடைந்த இதயமும் சைப்ரஸ் மரங்களால் சூழப்பட்ட கல்லறையும் தவிர அவளின் நினைவைக் கொண்டாட வேறெதுவும் இல்லை. சல்மாவிற்கு சாட்சி கூற அந்தக் கல்லறையும் இந்த இதயமும் மட்டுமே இருக்கின்றன.”
தன் தந்தையின் நண்பரின் வீட்டிற்கு அவரைச் சந்திக்கச் செல்லும் ஜிப்ரான் அவரின் மகளாக சல்மாவை முதன் முதலில் அங்கே சந்திக்கிறார். அப்போது சல்மாவை ஜிப்ரானுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் அவளின் தந்தை இப்படிச் சொல்கிறார்: “சல்மா மிகவும் உணர்வுபூர்வமானவள். அனைத்தையும் அவள் ஆன்மாவின் கண்களால் பார்க்கிறாள்.” இந்தக் கூற்று ஜிப்ரானுக்கும் பொருந்துகிறது. அவர் சல்மாவைத் தனது ஆன்மாவின் கண்களால் பார்த்தார். எப்போதுமே அப்பெண் அவருக்கு தெய்வீக ஒளி வெளிப்படுகின்ற தம்பமாகவே காட்சி தருகிறாள். நூலின் நான்காம் அத்தியாயமான “வெண்ணிறத் தம்பம்” (White Torch) என்பதில் அவர் சல்மாவைப் பின்வருமாறு வருணிக்கிறார்:
“சல்மா கராமியிடம் உடலழகும் ஆன்ம அழகும் இருந்தன. ஆனால், அவளை அறிந்திராத ஒருவருக்கு நான் எப்படி அவளை வருணிப்பேன்? இறந்த மனிதன் ஒருவன் குயிலின் பாடலையும் ரோஜாவின் நறுமணத்தையும் ஓடையின் பெருமூச்சையும் நினைவுகூர முடியுமா? பாரச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டுள்ள கைதியால் வைகறையின் இளங்காற்றைப் பின்தொடர இயலுமா? மௌனம் மரணத்தை விடவும் வேதனை அல்லவா? பிரகாசமான வண்ணங்களால் சல்மாவை உண்மையாக வருணிக்க முடியவில்லை என்பதால் சாதாரண வார்த்தைகள் கொண்டு அவளை வருணிக்க விடாமல் தற்பெருமை என்னைத் தடுக்கிறதா? பாலையில் பசியால் தவிக்கும் மனிதன், அவன் மீது சொர்க்கம் ’மன்னு-சல்வா’வைப் பொழியவில்லை எனில், காய்ந்த ரொட்டியைத் தின்பதற்குத் தயங்க மாட்டான்.
அவளின் வெண்ணிறப் பட்டுடையில், சல்மா, ஜன்னலின் வழியாக உள்ளே வரும் நிலவுக் கிரணம் போல் இருந்தாள். அவளின் நடையில் ஒத்திசைவும் வாத்சல்யமும் இருந்தன. அவளின் குரல் மென்மையாக இருந்தது. அவளின் உதடுகளிலிருந்து சொற்கள் விழுவது காற்றசையும்போது பூவிதழ்களில் இருந்து பனித்துளிகள் விழுவதைப் போல் இருந்தது.
ஆனால், சல்மாவின் முகம்! அதன் வெளிப்பாட்டை எந்த வார்த்தைகளும் வருணிக்க முடியாது. அதில் முதலில் மாபெரும் அகத்துயரமும் பின்பு வானத்தின் மேன்மையும் தெரிந்தன.
சல்மாவின் முக அழகு செவ்வியலானது அல்ல. அது தெய்வீக வெளிப்பாட்டின் கனவு போன்றது. ஓவியனின் தூரிகையோ சிற்பியின் உளியோ அதை அளக்கவோ வளைக்கவோ படியெடுக்கவோ இயலாது. சல்மாவின் அழகு அவளின் தங்க நிறக் கேசத்தில் இல்லை, ஆனால் அதனைச் சூழ்ந்திருந்த தூய பண்பில் இருந்தது; அவளின் பெரிய கண்களில் இல்லை, ஆனால் அவற்றிலிருந்து கிளம்பிய ஒளியில் இருந்தது; அவளின் சிவந்த உதடுகளில் இல்லை, ஆனால் அவளது சொற்களின் இனிமையில் இருந்தது; அவளின் தந்தக் கழுத்தில் இல்லை, ஆனால் சற்றே முன்னோக்கிய அதன் சாய்வில் இருந்தது. அது அவளின் கச்சிதமான உருவத்தில் இல்லை, ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் வெண்ணிற ஒளித்தம்பமாய் எரிந்திருந்த அவளது ஆன்மாவின் உன்னதத்தில் இருந்தது. அவளின் அழகு கவிதையின் பரிசு போன்றது.”
கலீல் ஜிப்ரானின் உள்ளம் சல்மாவை எத்தகைய முன்மாதிரியில் உருவகித்தது என்பதை அறிய அவர் எழுதிய “Jesus the Son of Man” என்னும் நூலில் ஏசுநாதர் பற்றி அவர் வருணித்து எழுதியுள்ள வரிகளைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, மேரி மக்தலீனா சொல்வதாக அவர் எழுதியிருக்கும் வரிகள். முதன் முறை ஏசுவைத் தான் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றி மேரி மக்தலீனா சொல்வதாக ஜிப்ரான் எழுதியுள்ளதில் இருந்து சில வரிகள்:
”அவரது நடையின் தாளகதி மற்ற ஆண்களிலிருந்து வேறுபட்டிருந்தது. அவரது தேகத்தின் அசைவு அதற்கு முன் நான் பார்த்திருந்த எதனைப் போன்றும் இல்லை.
ஆண்கள் பூமியின் மீது அம்மாதிரி நடை செய்வதில்லை. இப்போதும்கூட, அவர் நடந்தது மெதுவாகவா அல்லது வேகமாகவா என்பதை நான் அறியேன்.
நான் அவரைப் பார்த்தேன். என் உயிர் என்னுள் நடுங்கிற்று. ஏனெனில், அவர் அழகாக இருந்தார்.
அவரின் ஒற்றை உடலில் ஒவ்வொரு பகுதியும் மற்ற ஒவ்வொரு பகுதியையும் நேசிப்பது போல் இருந்தது.”
இதனைத் தொடர்ந்து ஏசுநாதர் தன்னுடன் உரையாடியதை மேரி மக்தலீனா பதிவு செய்கிறார். அத்தியாயம் முடிவில் இவ்வரிகள்:
”அதன் பின் அவர் கிளம்பிச் சென்றார்.
அவர் நடந்தது போன்று எந்த ஆணும் எப்போதும் நடந்ததில்லை. என் தோட்டத்தில் ஒரு மூச்சு பிறந்து கிழக்கை நோக்கிச் சென்றதுதானா அது? அல்லது, அனைத்தையும் அதனதன் அடித்தளத்திற்கு அசைத்துச் சாய்த்துவிடும் புயலா அது?”
இன்னொரு அத்தியாயத்தில் மேரி மக்தலீனா பின்வருமாறு ஏசுவை வருணிப்பதாக ஜிப்ரான் எழுதுகிறார்:
”அவரின் வாய் மாதுளம்பழத்தின் மார்பைப் போல் உள்ளது. அவரின் கண்களில் நிழல் மிகவும் ஆழமாக இருக்கிறது.
தன் வலிமையைத் தான் அறிந்திருக்கும் ஒருவரைப் போல் அவர் மென்மையாக இருக்கிறார்.
பூமியின் அரசர்கள் அவரின் முன் வியந்து நிற்பதாக நான் என் கனவுகளில் கண்டேன்.
அவரின் முகத்தைப் பற்றி நான் பேசலாம், ஆனால் எப்படி முடியும்?
அதுவோ இருள் இல்லாத இரவு போன்றும் இரச்சல் இல்லாத பகல் போன்றும் இருந்தது.
அது சோக முகம். மேலும், அது மகிழ்ச்சியான முகம்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒருபோது அவர் தன் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தினார். விலகியிருந்த அவரின் விரல்கள் ’ஆயா’ மரத்தின் கொப்புகளைப் போல் இருந்தன.
மாலையில் அவர் நடை பயின்றதை நினைவு கூர்கிறேன். அவர் நடக்கவில்லை. அவரே பாதையின் மீது ஒரு பாதையாக இருந்தார், பூமிக்கு மேலே மிதந்திருந்த போதும் அதற்கு உயிரூட்ட அதன் மீது இறங்கி வரும் ஒரு மேகம் போல் இருந்தார்.
      ஆனல் நான் அவரின் முன் நின்று அவருடன் பேசியபோது அவர் ஒரு மனிதராக இருந்தார், அவருடைய முகம் பார்வைக்கு வலியதாய் இருந்தது. அவர் என்னிடம் சொன்னார், ‘நீ என்ன செய்வாய், மிரியம்?’
அவருக்கு நான் பதில் சொல்லவில்லை. என் சிறகுகள் எனது ரகசியத்தை மூடின. நான் கதகதப்பானேன்.
அவரின் ஒளியை அதற்கு மேல் தாங்க இயலாதவளாய் நான் திரும்பி அப்பால் நடந்தேன், ஆனால் அது அவமானத்தில் அல்ல. நாணம் மட்டுமே. நான் தனித்திருப்பேன், அவரின் விரல்கள் என் இதயத்தின் நரம்புகளை மீட்டியிருக்க.”

      மிரியம் அல்லது மர்யம் (ஆங்கிலத்தில் மேரி) என்பது பாலஸ்தீனப் பகுதியில் ஒரு பொதுப் பெயர், தமிழில் ஔவை என்பதைப் போல். அப்பெயரில் பல பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஏசுவின் வாழ்வில் வரும் மர்யம்கள் பலர். அவர்களுள் ஒருவர் ஏசுவின் சோகம் மற்றும் புன்னகை பற்றிக் கூறுவதாக ஜிப்ரான் எழுதுவதைக் காண்போம்:
“அவரின் தலை எப்போதும் உயர்ந்திருந்தது. அவரின் கண்களில் கடவுளின் சுடர் இருந்தது.
அவ்வப்போது அவர் சோகமாக இருந்தார். ஆனால் அவரின் சோகம் என்பது துன்பத்தில் இருப்போர் மீது காட்டப்பட்ட மென்மையாகவும் தனிமை கொண்டோருக்குக் கொடுக்கப்பட்ட பக்கபலமாகவும் இருந்தது.
அவர் புன்னகைத்த போது அவரின் புன்முறுவல் மறைவை அறிய ஏங்குவோரின் பசியைப் போல் இருந்தது. அது பிள்ளைகளின் கண்ணிமைகள் மீது விண்மீன்களின் புழுதி விழுவது போல் இருந்தது. மேலும் அது தொண்டைக்குள் இறங்கும் ரொட்டித் துண்டினைப் போல் இருந்தது.
அவர் சோகமாகத்தான் இருந்தார். எனினும் அச்சோகம் உதடுகளுக்கு உயர்ந்து ஒரு புன்னகையாய் மாறுவதாக இருந்தது.
அது இலையுதிர் காலம் இவ்வுலகின் மீதிருக்கையில் கானகத்தில் பரவும் தங்கத் திரையைப் போல் இருந்தது. மேலும் சிலநேரங்களில் அது ஏரியின் விளிம்பில் ஒளிரும் நிலா வெளிச்சம் போல் இருந்தது.
திருமண விருந்தில் அவரின் உதடுகள் பாட்டிசைக்கும் என்பது போல் அவர் புன்னகைத்தார்.
எனினும், தன் சக போராளியை விட்டும் மேலெழுந்து விடாத ஒரு வானவரின் சோகத்துடன் அவர் சோகமாக இருந்தார்.”
இன்னுமொரு நபரின் வருணனையையும் பார்த்துவிடுவோம். பிப்ளாஸ் என்னுமிடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணின் வழியாக ஜிப்ரான் பேசுகிறார்:
”நதிகள் பேசுவது போல் அவர் பேசினார்; அவரின் குரலும் காலமும் இரட்டைப் பிள்ளைகள்; அவரின் வாய் இனிப்பாக்கப்பட்ட ஒரு சிவந்த வேதனை; கசப்பு அவரின் உதடுகளில் தேனாக மாறும்.”
சல்மாவைப் பற்றியும் ஏசுநாதரைப் பற்றியும் கலீல் ஜிப்ரானின் இருவேறு நூற்களிலிருந்து சில வருணனைகளைக் கண்டோம். இருவரின் முகத்தைப் பற்றியும் அவர் சொல்லியிருப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்:
”ஆனால், சல்மாவின் முகம்! அதன் வெளிப்பாட்டை எந்த வார்த்தைகளும் வருணிக்க முடியாது.”
”அவரின் முகத்தைப் பற்றி நான் பேசலாம், ஆனால் எப்படி முடியும்?”
ஜிப்ரானின் அகம் சல்மாவின் முகத்தை ஏசுநாதரின் முகத்தின் முன் உயர்த்திப் பிடிக்கப்பட்ட கண்ணாடியாகவே காண்கிறது.

தாந்தேவின் தாக்கம் ஜிப்ரானின் ’முறிந்த சிறகுகள்’ கதையில் இருப்பதாகச் சொன்னேன். எனினும், தாந்தேவின் மீது இன்னொரு ஆளுமையின் தாக்கம் இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த ஆளுமை, மாபெரும் ஆன்மிக ஞானிகளில் ஒருவர், தாந்தேவுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் ஸ்பெய்ன் நாட்டில் வாழ்ந்தவர்.
(to be continued)

Thursday, May 15, 2014

...என்றார் சூஃபி - part 6

24
05.05.2014. enroute kattappana.

மலைச் சாலையின் கொண்டையூசி வளைவுகளில் எங்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது. உயரம் செல்லச் செல்ல காற்றில் குளுமையும் தூய்மையும் கூடி வந்தன. மூச்சு அனிச்சையாக ஆழமாகி ஆனந்தம் பொங்கிற்று.
“இது அன்ஃபாசெ ஈசா (ஏசுவின் மூச்சு) போல் இருக்கிறது” என்று வியந்து கூறினேன்.
“கீழே காற்று கரியமில வாயு கலந்து மாசுபட்டுள்ளது. இங்கே மலைகளின் உயரத்தில் தூய்மையாகவும் குளுமையாகவும் உள்ளது.
கீழான எண்ணங்கள் வெளிப்பட்டிருக்கும் மனதின் மூச்சு மாசுபட்ட காற்றாக இருக்கிறது. விறகு எரிந்தால் கரிப்புகை வரும். இச்சைகளால் எரியும் மனத்தின் மூச்சு கரியமில வாயுவாகத்தான் இருக்கும். அத்தகைய மனிதனின் மூச்சு அனைவருக்கும் விஷமாகும்.
இறைஞானியின் மனம் மலைச் சிகரமாகும். அவரின் மூச்சு மலையில் வீசும் காற்றைப் போல் குளுமையானது, தூய்மையானது. இறைஞானியின் மூச்சுதான் இறந்த இதயங்களுக்கு உயிரூட்டும் அன்ஃபாசெ ஈசா” என்றார் சூஃபி.
25
06.05.2014. from rosaappookkandam (kumily) to kanavaakkuzhi.

மழையில் நனைந்துகொண்டிருந்தது மலையாள நாடு. கேரளாவை அம்மண்ணின் மக்கள் கடவுளின் சொந்த நாடு (God’s own country)  என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள். இயற்கை வளமும் குளுமையான பருவகாலமும் அவ்வாறு சொல்வதைப் பொருத்தமாக உணர வைக்கின்றன.
கனவாக்குழி என்னும் மலைக்கிராமத்தில் உள்ள ஏலக்காய்த் தோட்டத்திற்கு எங்கள் வாகனம் போய்க் கொண்டிருந்தது. இடையில் ஒரு கிராமம் வந்தது. அதன் பெயர் ‘சாத்தானோடை’ என்று சொன்னார்கள். அதனைக் கேட்டதும் மெல்ல சிரித்தபடி, “Stream of Satan in God’s own country” (கடவுளின் சொந்த பூமியில் சாத்தானின் ஓடை) என்றார் சூஃபி.
விண்ணிலும் மண்ணிலும், இம்மையிலும் மறுமையிலும், எங்கும் எதிலும் இறைவனின் ஆட்சியே நடக்கின்றது. ஆதமும் ஹவ்வாவும் சொர்க்கத்திலிருந்து வெளியேற கருவியாய் இருந்தவன் சாத்தான். எனினும், கடவுளின் ராஜ்ஜியத்தை விட்டும் அவன் எங்கே வெளியேற முடியும்?
26
06.05.2014 – 3:00 p.m, kanavakkuzhi.
nadeem bilali, trekking thru cardamom estate

ஏலத்தோட்ட வீட்டில் மதிய உணவு. லேசான தூரிக் கொண்டிருந்தது. நான் தனிமையை நாடி அலுவலகக் கட்டிடத்தின் வராந்தாவுக்குச் சென்றுவிட்டேன். சரிந்து செல்லும் மலைப்பாதையும் அதன் பின்னணியில் உயர்ந்து நிற்கும் மரங்களும் அதற்கு அப்பால் உள்ள மலைத் தொடர்களும் அந்த வராந்தாவிலிருந்து காட்சி தந்தன. மலை வலுத்துக் கொண்டது. பனிமூட்டம் புகை போல் அசைந்து கொண்டிருந்தது. மலை முகடுகளின் மேல் விண்ணில் ஓர் அபூர்வ வெளிச்சம். மௌனமும் சப்தமும் கலந்துவிட்டது போல் இருளும் ஒளியும் கலந்த ஆனந்த வெளிச்சமாய் அது இருந்தது. ஏதும் எழுதப்படாத தாள் போன்றும் எல்லாம் எழுதப்பட்ட ஏடு போன்றும் ஏக சமயத்தில் அது தோன்றியது.
சிறிது நேரத்தில் மழை சற்றே குறைந்தது. தூரலுடன் வீசிய காற்றில் மரங்களின் உச்சிக் கொப்புகள் அசைந்தாடின. அவற்றில் சின்னஞ் சிறு கரிய பறவைகள், நான்கு அல்லது ஐந்து பறவைகள், வானில் வட்டமடித்துப் பறப்பதும் அசையும் கிளைகளில் மீண்டும் வந்து அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்தபோது சட்டென்று ஒரு விஷயம் புலப்பட்டது. அப்போது அங்கே மழையோசை தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்தப் பறவைகளும்கூட ஓசை எழுப்பாமல்தான் பறந்து வட்டமடித்துக் கொண்டிருந்தன. இது எனக்குப் புதுமையாக இருந்தது. மரக்கிளைகளில் விளையாடும் பறவைகள் சப்தம் எழுப்பாமல் இருந்ததை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவற்றுக்கும் அத்தருணம் மழையின் ஓசையை ரசித்துக் கொண்டாடும் தருணம் போலும். அவற்றின் இயக்கம் மழையின் இசைக்கு அவை ஆடும் நடனம் போலும்.
மரங்களில் செடிகளில் எல்லாம் மழைத் தாரைகள் பொழிந்து ஒருவித ஓசை எழுந்துகொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்த மரங்களின் செடிகளின் ஓசையா?
நான் நின்றுகொண்டிருந்த முற்றத்தின் மேலிருந்த தகரக் கூரையில் மழை-நீர் விழுந்து ஓசை எழும்பிக் கொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்தத் தகரக் கூரையின் ஓசையா?
வெராந்தாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் வாலியில் மழை நீர் விழுந்து ஓசை எழும்பிக் கொண்டிருந்தது. அந்த ஓசை மழையின் ஓசையா? அல்லது அந்த வாலியின் ஓசையா?
,அந்த மழை இறைவனின் அருள்-மழை. இறைவனின் கருணை எல்லாப் பொருட்களையும் மீட்டி இசைத்துக் கொண்டிருப்பதாக அத்தருணத்தில் உணர்ந்தேன்.
“இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்து, அதைக் கொண்டு பூமியை – அது உயிரிழந்த பின் உயிர்பெறச் செய்கிறான். செவியேற்கும் மக்களுக்கு இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது” (வல்லாஹு அன்ஸல மினஸ் சமாஇ மாஅன் ஃப-அஹ்யா பிஹில் அர்ள பஃத மவ்த்திஹா. இன்ன ஃபீ தாலி(க்)க ல-ஆயத்தல்லிகவ்மின் (ய்)யஸ்மஊன் -16:65) என்னும் திருவசனத்தைக் குர்ஆனிலிருந்து ஓதினார் சூஃபி.
மழை பற்றிய இந்த ஆயத்தில் அல்லாஹ் ’சமாஅத்’ (கேட்டல்) என்னும் பண்பினைச் சொல்லியிருப்பதில் என் கவனம் நின்றது.
“உன் கண்களும் செவிகளாகாத வரை மழை கொண்டுவரும் அத்தாட்சியை உன் இதயம் பெற்றுக்கொள்ள இயலாது” என்றார் சூஃபி.
27
06.05.2014. from kattappana to cumbum.

இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. கம்பம் மெட்டிலிருந்து மலைச்சரிவில் பதினெட்டு கொண்டையூசி வளைவுகளின் வழியாகக் கீழே இறங்கும் பயணம். மழையும் பனிப்படலுமாகப் பாதையை மறைக்கின்றன. உள்ளே அமர்திருந்த அனைவரையும் அச்சம் பீடித்துக் கொண்டது. ஒருமணி நேரப் பயணமாக ஊர் வந்து சேர்ந்தோம். “உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தோம்” என்றார் ஒரு பெண்மணி. பொதுவாக இப்படிச் சொல்வது வழக்கம்தான். பேச்சு வழக்கு.
சட்டென்று, “உங்கள் கை கடவுளின் கை ஆகும் தருணமா அது?” என்றார் சூஃபி.
நபி (ஸல்) அவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள், “வல்லதீ நஃப்சீ பியதிஹி” (என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!) என்று. சர்வ சிருஷ்டிகளின் உயிர்களுமே அவனின் கைப்பிடியில்தான் இருக்கின்றன.
இறைநேசர்களைப் பற்றிய ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் சொல்கிறான்: “அவன் பார்க்கும் கண்களாக நான் ஆகிவிடுகிறேன். அவன் கேட்கும் செவிகளாக நான் ஆகிவிடுகிறேன். அவன் பற்றும் கையாக நான் ஆகிவிடுகிறேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுகிறேன்”
இந்த நிலை இறைத்தூதர்கள் உள்ளிட்ட அனைத்து இறைநேசர்களுக்கும் பொருந்தும். நபி (ஸல்) அவர்களின் நிலையும் இதுவே. நபியின் கை இறைவனின் கை.
நபித்தோழர்கள் ஒருமுறை நபியிடம் வாக்குறுதி (பைஅத்) செய்தார்கள். நபியின் ஒரு கை மீது தோழர்களின் கைகள் இருந்தன. நபியின் இன்னொரு கை அவர்களது தோழர்களின் கைகள் மீது இருந்தது. இந்நிகழ்வை குர்ஆனில் அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:
”(நபியே!) நிச்சயமாக உங்களிடம் வாக்குறுதி செய்தவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி தந்தார்கள். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகள் மீது இருந்தது”
ஆபத்தான கட்டங்களில் நாம் உணரவேண்டியது என்ன? தவ்ர் குகையில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சொன்னதுதான்: “அஞ்சற்க, அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” (லா தஹ்ஸன் இன்னல்லாஹ மஅனா -9:40)
பொதுவாக, ஆபத்தான கட்டங்களில் மனிதனின் பிரக்ஞை முழுமையான விழிப்பில் இருக்கிறது. உச்சத்தில் இருக்கிறது. தன்னுடன் இறைவன் இருப்பதை உணர்வதே அதன் உச்ச நிலை. அதிலும் என் கண்ணாகவும் காதாகவும் கையாகவும் காலாகவும் அவனே இருக்கிறான் என்னும் நிலைக்கு பிரக்ஞை விழிப்படைவதே இறைநேசத்தின் (விலாயத்) நிலை.
அந்த நிலையில் உள்ளவர், ‘உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தேன்’ என்று சொன்னால் அதன் பொருள் ‘உயிர் அவனின் கைவசத்தில் பாதுகாப்பாக இருந்தது’ என்பதுதான்.
28
heart-of-stone by cathie douglas
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.
“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் சூஃபி.
29
”இரண்டு பறவைகள் ஒரே மரத்திலிருந்து கனிகளை உண்டன. அக்கனிகளில் இருந்த கடுகு அளவிலான விதைகள் அந்தப் பறவைகளின் அலகில் ஒட்டியிருந்தன. அப்பறவைகள் இரண்டும் ஆளுக்கொரு திசையில் பறந்து சென்றன. ஒரு பறவை ஊருக்கு வெளியே இருந்ததொரு பொட்டல் நிலத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தன் அலகை உதறியது. அதில் ஒட்டியிருந்த சில விதைகள் ஈரத்தின் சுவடுகூட இல்லாத அந்தக் காய்ந்த பூமியில் விழுந்தன. அந்த விதைகள் சிறிது நேரத்திலேயே வறுபட்டுப் போயின.
இன்னொரு பறவை ஊருக்குள் சுற்றித் திரிந்தபடி ஒரு குட்டிச் சுவரின் மீது அமர்ந்து தன் அலகை உதறியது. அதில் ஒட்டியிருந்த சில விதைகள் அந்தச் சுவரின் கீழிருந்த சாக்கடையின் ஓரமாக விழுந்தன. சில நாட்களில் அவ்விதைகள் செடிகளாக முளைத்து விட்டன. அவற்றைக் கண்ட விவசாயி ஒருவன் ‘அடடே! இவை இன்ன வகைக் கனிகளின் செடிகளாச்சே!’ என்று மகிழ்ந்தவனாக அவற்றை அப்படியே வேரோடு கெல்லி எடுத்துக்கொண்டு போய் நல்ல நிலத்தில் நட்டுவைத்தான்”

இக்கதையைச் சொல்லிவிட்டு, ”நேசத்தின் ஈரம் அறவே இல்லாத இதயத்தை விடவும் தவறான கோணத்திலாவது நேசம் இருக்கிறதே அத்தகைய இதயம் நல்லது” என்றார் சூஃபி.

Sunday, May 4, 2014

...என்றார் சூஃபி - part5

19

இறைஞானி பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்களின் ஆன்மிக உரையைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வாழ்வில் அன்றாடம் நாம் காணும் இயல்பான நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி அவற்றைக் கொண்டே இறைவனை நாம் விளங்கிக் கொள்ளும் வகையில் தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள் மகான் அவர்கள். ஒரு கட்டத்தில் பின்வருமாறு பேசினார்கள்:

“பாம்பினை வைத்துத் தெருவில் வித்தை காட்டுபவனைப் பார்த்திருக்கிறேன். அவன் மகுடி வாசிப்பான். படமெடுத்து நிற்கும் நாகம் தலையசைத்து ஆடும்.
பாம்பும் மனிதனும் பகைவர்கள் அல்லவா? இது அவனைக் கடித்துக் கொல்லும். அவன் 
இதனை அடித்துக் கொல்வான்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது? பாம்பு, நடனம் ஆடி அவனுக்குக் காசு சம்பாதித்துத் தருகிறது. பதிலுக்கு அவன், அதற்குப் பாலும் முட்டையும் வாங்கி ஆகாரம் வைக்கிறான்.
ஒருவருக்கொருவர் உயிரை எடுப்பார்கள் என்னும் பகைவர்களை ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கு உதவி செய்பவர்களாக ஆக்கி வைக்கிறான் அல்லாஹ்.

தெரிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுக்கு நன்மை செய்ய நாடினால் உங்கள் எதிரியை வைத்துக்கூட உங்களுக்கு நன்மை செய்துவிடுவான். உங்களுக்குத் தீமை நிகழ வேண்டும் என்று அவன் நாடிவிட்டால் உங்களின் நண்பர்களை வைத்துக்கூட உங்களுக்குத் தீமைகள் நிகழ வைப்பான்.”

இந்த விளக்கத்தைப் பற்றி அலசிப் பேசிக் கொண்டிருந்தோம். மகானின் தத்துவங்கள் மேலும் துலங்கிக் கொண்டிருந்தது.

“சில நேரங்களில் நம்மைக் கொண்டே நமக்குத் துன்பங்கள் நேரும்படியும் ஆகிவிடுகிறது. தன்னை மறந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நம் பல்லே நம் நாக்கை நறுக்கென்று கடித்துக் காயப்படுத்தி வலியால் நாம் துடிப்பது உண்டல்லவா?” என்றார் சூஃபி.

20

காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை…

ஆதி இறையில்லத்தின் காட்சிப் பரவசத்தைப் பறைசாற்றும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவரவரின் புனிதப் பயண அனுபவங்களை நண்பர்கள் பகிர்ந்து 
கொண்டார்கள்.

“கஃபாவை மட்டுமல்ல. இதோ, பாசி படர்ந்திருக்கும் இந்தப் பழைய ஈரச் சுவரின் மீது, லேசான விரிசலில் வேர்விட்டு இறைவனைத் துதித்தபடி நிற்கின்ற இந்தப் புல்லின் இதழைக் காணவும் கோடிக் கண்கள் வேண்டும்தான்.

சொல்லப் போனால், அகப்பார்வை இல்லாத கோடிக் கண்களால் என்ன பயன்?

சிலந்தியின் எட்டுக் கண்கள்
வெட்டுக் கிளியின் பட்டுக் கண்கள்
எறும்பின் கலவைக் கண்கள்
பூனையின் சலவைக் கண்கள்
ஆந்தையின் பெரிய கண்கள்
யானையின் சிறிய கண்கள்
இவற்றினும் மனிதக் கண்கள்
எப்போது புனிதக் கண்கள்?

”புறக்கண்கள் அந்தப் பேரரசனைக் காணவியலும் எனில்
மாடுகளும் கழுதைகளும் அல்லாஹ்வை தரிசிக்குமே”
(கர் பதீதி ஹிஸ்ஸெ ஹைவான் ஷாஹ் ரா
பஸ் பதீதி காவோ ஃகர் அல்லாஹ் ரா)
என்று மௌலானா ரூமி (ரஹ்) பாடுகிறார்கள்.

அகப்பார்வை இல்லாத ஆயிரம் கண்களை விடவும் அகப்பார்வை கொண்ட ஒற்றைக் கண் மேலானது” என்றார் சூஃபி.

21
“உங்களில் இறந்தவர்கள் மீது யாசீனை ஓதுங்கள்” (இக்ரஉ யாசீன் அலா மவ்த்தாக்கும்) என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி.

திருக்குர்ஆனின் 36-வது அத்தியாயமாக இருப்பது சூறத்துல் யாசீன். ‘குர்ஆனின் இதயம்’ என்று அதனை நபி(ஸல்) அவர்கள் வருணித்தார்கள். அதனை ஓதி இறந்து போனவர்களின் ஆன்மாக்களுக்கு அதன் நன்மைகளைச் சேர்ப்பதை இந்த நபிமொழி ஊக்கப்படுத்துகிறது.
”இந்த நபிமொழியில் இன்னொரு சமிக்ஞையும் இருக்கிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் ‘நான் பேசும் குர்ஆன்’ (அனா குர்ஆனுன் நாத்திக்) என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அலிஃப் என்னும் ஒற்றை எழுத்தின் அகமியங்களை ஒரு நாள் முழுவதும் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அப்படியாக, குர்ஆனின் ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் எவரோ அவரே நடமாடும் குர்ஆன் ஆவார். அவரின் இதயம் யாசீன் ஆகும். இறையுணர்வு இன்றி இறந்து கிடக்கும் உங்கள் இதயங்களை அத்தகைய ஞானிகளின் இதயங்களுடன் இணைத்து வைத்து உயிரூட்டுங்கள் என்பதும் மேற்சொன்ன நபிமொழியில் பொதிந்து கிடக்கும் சமிக்ஞை ஆகும்” என்றார் சூஃபி.
22
”ஒருவர் எப்போது சூஃபி ஆகிறார்?” என்றொரு இளைஞர் வினவினார்.
“அவரின் தூக்கம் விழிப்பாகவும் அவரின் விழிப்பு தூக்கமாகவும் ஆகும்போது” என்றார் சூஃபி.
அதாவது, சூஃபிகள் தூக்கத்திலும் பிரக்ஞையோடு இருக்கிறார்கள் என்றும் ஒருவர் ஆழ்ந்து உறங்கும்போது எத்தனை நிம்மதியாக (relaxed) இருப்பாரோ அதுபோல் விழிப்பிலும் இருக்கிறார்கள் என்றும் இதனை நான் புரிந்துகொண்டேன்.
23

04.05.2014, 6:18 p.m.
மௌனமாக அடியெடுத்து வைத்து அந்தி வந்துவிட்டது. மஞ்சுகள் இறங்கிய மலைகள் தம் பிரம்மாண்டத்தால் ஒரே சமயம் தொலைவில் இருப்பது போன்றும் அருகில் இருப்பது போன்றும் தோன்றுகின்றன. இங்கிருந்து அவற்றைக் கண் நிறுத்திக் காண்கையில் சட்டென்று நான் அங்கிருப்பதாகப் படுகிறது.
மலைத்தொடரின் விளிம்பில் மின்மினி போல் ஓரிரு தீபங்கள் பூக்கின்றன, இங்கிருந்து காண அத்தனைச் சின்னதாய், சிமிட்டிக்கொண்டு.
“இங்கிருந்து அந்த விளக்கினை நாம் காண்கிறோம். ஆனால் அந்த விளக்கின் வெளிச்சத்தில் நாம் எதையாவது பார்க்க முடியுமா?” என்று கேட்டார் சூஃபி.
“அந்த விளக்கு இருக்கும் இடத்திற்கு, அதற்கு அருகில் போனால் காணலாம்” என்றேன் நான்.

“முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு பிரகாசிக்கும் விளக்கு – சிராஜம் முனீரா. இதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விளக்கின் வெளிச்சத்தில் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள் குறைவு. நீ அந்த விளக்கிற்கு அருகில் இரு” என்றார் சூஃபி.