Monday, March 26, 2012

இசைப்புயலின் மையம் (தொடர்ச்சி-1 )



ஏ.ஆர்.ரஹ்மான் தன் இயக்கத்தைத் தமிழில் குறைத்துக் கொண்டு ஹிந்தியில் அதிகமாக்கிக் கொண்டதற்கும் தமிழின் இந்தப் பின்னணிதான் காரணம். ஹிந்திப் படங்கள் என்றும் ஹிந்திப் பாடல்கள் என்றும் சொல்லப்படுகிறதே தவிர அந்தப் படங்களில் வசனங்களும் பாடல்களும் பெரும்பாலும் உருதுவாகவே இருக்கும். ஏனெனில் வசனம் எழுதுவதும் பாடல்கள் எழுதுவதும் இலக்கியத் தரமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் உருது மொழியை நன்கு அறிந்தவர்களிடமே கொடுக்கப்பட்டு வந்தன. உருது கஜல் மற்றும் கவ்வாலி பாடல்களுக்கு ஹிந்தித் திரைப்படங்களில் ஒரு முக்கியமான இடம் அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் உருதுவின் லிபியில்தான் பாடல்களையே எழுதுகிறார்கள். பாடகர்கள் அதனை வாசிக்கத் தெரிந்திருக்கிறார்கள். உருது மொழியைப் பொருத்தவரை அது முகலாய இந்தியாவில் போர்க்களத்திலும் சந்தையிலும் பல மொழிகளின் கலவையில் உருவாகி வந்த ஒரு மொழி என்றாலும்கூட மிக விரைவிலேயே இலக்கிய அந்தஸ்த்தையும் செவ்வியல் தன்மையையும் பெற்றுவிட்ட ஒன்றாகும். அதற்குக் காரணம் அம்மொழி அரபு மற்றும் பாரசீக மொழிகளின் சமயஞான மற்றும் இலக்கிய மரபுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தது. எனவே சூஃபித்துவம் சார்ந்த பல கலைஞானச் சொற்கள் (இஸ்திலாஹாத்) அந்த மொழியில் இயல்பாகவே பயன்படுத்தப் படுகின்றன. காதலைக் குறிக்க ’ப்யார்’ என்னும் உருதுச் சொல் எவ்வளவு இயல்பாகப் பயன்படுத்தப் படுகிறதோ அதே அளவு இயல்பாகவே இஷ்க் மற்றும் முஹப்பத் ஆகிய அரபுச் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஹிந்திப் படப்பாடல் ஒன்றின் முதல் வரி: ‘ஆ(ன்)கோ(ன்) கீ குஸ்தா      ஃகியா(ன்) முஆஃப் ஹோ’ (’கண்களின் சேட்டைகள் மன்னிக்கப் படட்டும்’) இந்த வரியில் உள்ள குஸ்தாஃக் என்பது ஃபார்சி மொழிச் சொல், முஆஃப் என்பது அரபி மொழிச் சொல். இது போல் ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஃபார்சி மற்றும் அரபிச் சொற்கள் சர்வ சாதாரணமாக இடம் பெறுவதைக் காணலாம். இந்தத் தன்மையே சூஃபித்துவத் தாக்கம் கொண்ட பாடல்களைக் குறியீடாக இடம்பெறச் செய்வதற்கு வசதியை உண்டாக்கித் தருகின்றது. தமிழில் அது சாத்தியப் படுவதில்லை.

மேலே மொழிபெயர்ப்பில் தரப்பட்டுள்ள கவ்வாலி பாடலில் வரும் ஒரு சொல்லை வைத்து மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை விளக்குகிறேன். இறைவனைக் குறிக்க ‘ரங்ரேஸா’ என்னும் ஃபார்சி வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். ’வண்ணங்கள் தருபவன்’ என்பது இதன் அர்த்தம். இது சூஃபிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு கருத்து. இந்த வருணனையின் பின்னணியில் திருக்குர்ஆனின் வசனம் ஒன்று உள்ளது.

அல்லாஹ்வின் வண்ணத்தில் தோய்க.
வண்ணம் கொடுப்பதில்
அல்லாஹ்வினும் அழகன் யார்?
அவனையே நாங்கள் வணங்குகிறோம்
(சிப்கத்தல்லாஹி, வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கதன் வ நஹ்னு லஹூ ஆபிதூன் – 2:138)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘சிப்கத்தல்லாஹ் – அல்லாஹ்வின் வண்ணம்’ என்பதன் பொருள் என்ன என்பதில் மார்க்க அறிஞர்களிடம் பல கருத்துக்கள் உள்ளன. வெளிப்படையான கருத்தாக மார்க்கம் என்பதையே சொல்கிறார்கள். ‘அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தில் தோய்வீராக’ என்று சொல்கிறார்கள். சூஃபிகள் இதன் உள்ளர்த்தமாக ‘அல்லாஹ்வின் திருப்பண்புகள்’ (சிப்கத்துல்லாஹ் யஃனி சிஃபாத்துல்லாஹ்) என்று சொல்கிறார்கள். ஏனெனில் வண்ணம் என்பது ஒன்றின் இயல்பை மறைத்து தன்னை வெளிப்படுத்திக் காட்டுவதாகும். வெள்ளை நிறம்தான் பருத்திநூலில் நெய்யப்பட்ட ஆடையின் உண்மை நிறமாகும். ஆனால் அதற்கு வண்ணம் ஏற்றிவிட்டால் அதன் அசல் நிறம் மறைந்து ஏற்றப்பட்ட வண்ணத்திலேயே அது காட்சி தரும். அதுபோல் படைப்புக்களின் குணங்களை மறைத்து இறைவனின் குணங்கள் அவற்றில் வெளிப்படும் நிலையையே இந்தத் திருவசனம் குறிப்பிடுகிறது. படைப்புக்களின் அசல் குணங்களான மரணம், மூடம், நாட்டமின்மை, இயலாமை, செவிடு, குருடு, ஊமை ஆகியவற்றை மறைத்து இறைப்பண்புகளான ஜீவன், அறிவு, நாட்டம், ஆற்றல், கேள்வி, பார்வை, பேச்சு ஆகியவையே வெளிப்பட்டுக் காட்சி தருகின்றது. இறைவன் தன் பண்புகளின் சுடர்கள் நம்மீது பாய்வதை மறைத்து நம் அசல் தன்மைகளை வெளிப்படுத்தும் போது நாம் பிணம்தான் என்பதும் முட்டாள் என்பதும், நாம் சக்தியற்றவர்கள் என்பதும், நாட்டமில்லாதவர்கள் என்பதும், நாம் செவிடர்கள் குருடர்கள் ஊமைகள் என்பதும் வெளிப்படுகின்றன.

“இறைவா! எங்களை உன்னுடைய அழகான ஆடையால் போர்த்துவாயாக!” (அல்லாஹும்மஸ்துர்னா பி சித்ரத்திகல் ஜமீல்) என்னும் பிரார்த்தனையும் இதே உட்பொருளைத்தான் கொண்டுள்ளது. அழகான ஆடை என்று வருணிக்கப்படுவது இங்கே இறைப்பண்புகளைத்தான்.
பயபக்தியின் ஆடை
அதுவே சிறந்தது
(லிபாசுத் தக்வா தாலிக ஃகைர் – 7:26)
என்னும் திருவசனத்தையும் இந்த அடிப்படையிலேயே நாம் விளங்கலாம்.

’ரங்ரேஸா’ என்னும் வார்த்தைக்கு இப்படியொரு ஆன்மிகப் பின்னணி இருக்கிறது. இந்தப் பின்னணி சூஃபி இலக்கியங்களில் பல காலங்களில் வளர்ந்து வந்த ஒன்று. கவ்வாலி இசையை இந்தியாவில் உருவாக்கிய இசைமேதையும் கவிமேதையுமான அமீர் ஃகுஸ்ரூ (1253-1325 கி.பி) அவர்கள் தன் குருநாதரான சூஃபி மகான் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களின் மீது பாடிய கவிதைகளில் இந்த ”ரங்” – வண்ணம் என்னும் குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களில் இறைப்பண்புகளின் சுடர்கள் மிகைத்துப் பிரதிபலிக்கும் நிலையை வருணித்து அவர் பாடியுள்ள கவ்வாலியைப் பாடாத பாடகர்களே சூஃபி வட்டங்களில் இருக்க முடியாது. அதிலிருந்து சில வரிகள்:
இன்றென்ன வண்ணமயம், அம்மா, எத்தனை வண்ணமயம்!
என் காதலனின் வீட்டில் இன்று ஒரே வண்ணமயம்!
(ஆஜ் ரங் ஹே ஏ மா(ன்) ரங் ஹே ரீ
மோரே மெஹ்பூப் கே கர் ரங் ஹே ரீ)
இதுபோல் ஒரு வண்ணத்தை எங்கும் நான் கண்டதில்லை
என் குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியாவில் கண்டுகொண்டேன்!
(மைன் தோ எய்சோ ரங் அவ்ர் நஹீன் தேக்கீ ரே
மோஹே பீர் பாயோ நிஜாமுத்தீன் அவ்லியா)
நிஜாமுத்தீன் அவ்லியாவே!
உங்கள் வண்ணத்தை என்மேல் பூசுங்கள்
(தோரா ரங் மன் பாயோ நிஜாமுத்தீன் அவ்லியா)

அமீர் ஃகுஸ்ரோவின் காலத்தில் உருது மொழி உருவாகவில்லை. அவர் நாட்டுப்புற ஹிந்தியான ‘ப்ரிஜ்பாஷா’ மொழியிலும் ஃபார்சி மொழியிலும்தான் தன் கவிதைகளை எழுதினார். ‘ஸிஹாலே மிஸ்கீன்’ என்று தொடங்கும் அவரது அற்புதமான கவிதை இந்த இருமொழிகளிலும் அமைந்துள்ளது. நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அவர் பாடியுள்ள ’ச்சாப் திலக் சப்ச்சீனி ரே’ என்னும் கவிதையிலும் இந்த ’ரங்’ இடம்பெற்றுள்ளது:
என் உயிர் உங்களுக்கு அர்ப்பணம்,
என் ஆடைக்குச் சாயம் ஏற்றுபவரே!
ஒரே ஒரு பார்வையால்
உங்கள் வண்ணத்தில் என்னை ஆக்கிவிட்டீர்கள்!
(பல் பல் ஜாவூ(ன்) மை(ன்) தோரே ரங் ரஜ்வா
அப்னீ சீ கர் லீ(ன்)ஹீரே மொசே நய்னா மிலை கே)

அமீர் ஃகுஸ்ரோ எழுதிய இன்னொரு முக்கியமான பாடல் ‘மோஹே அப்னே ஹி ரங்’. வசந்த காலத்தில் பாடுவது போன்ற பின்னணியில் அமைந்துள்ளது. இளம்பெண் ஒருத்தி தன் கணவனை எண்ணிக் காதலில் உருகிப் பாடுவது போன்ற பாவனையில் இப்பாடல் அமைந்துள்ளது.
உங்கள் வண்ணத்தில் என்னை வண்ணமயம் செய்க
என் சிநேகிதன் நீங்களே, இறைவனின் நேசரே!
(மொஹே அப்னே ஹி ரங் மே(ன்) ரங் லே
தூ தோ சாஹிப் மேரா மெஹ்பூபே இலாஹி)
என்னுடைய மேலாடை, என் காதலனின் தலைப்பாகை
வசந்தத்தின் வண்ணத்தில் இரண்டும் ஒன்றாகட்டும்
(ஹம்ரி ச்சுனரியா பியா கி பதரியா
ஓ தோ தோனோ(ன்) பஸந்தீ ரங் லே)
வண்ணத்தின் விலையாக எதையும் கேளுங்கள்
என் இளமையை அர்ப்பணமாய் எடுத்துக்கொள்ளுங்கள்
(ஜோ குச் மாங்கே ரங் கீ ரங்காயி
மோரா ஜோபன் கிர்வீ ரக் லே)

மேற்கூறிய இந்தப் பாடல்களின் பின்னணியில் வேறு சில பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்துள்ளன. ‘பஸந்தீ ரங்’ என்று மேற்கண்ட பாடலில் வரும் சொலவடை ‘மோஹே தூ ரங் தே பஸந்தீ’ என்னும் பாடலாக வெளிவந்தது. அப்பாடலின் கருத்தும் மேற்காணும் பாடற்கருத்தைத் தழுவியே எழுதப்பட்டிருந்தது. ‘தக்‌ஷக்’ படத்தில் ஜாவித் அஃக்தர் எழுதிய ’ரங்தே’ என்னும் பஞ்சாபி மொழிப் பாடல் அமீர் ஃகுஸ்ரோ மற்றும் பாபா புல்லே ஷாஹ் ஆகியோரின் புகழ் பெற்ற பாடல்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக எழுதப்பட்டிருந்தது.

எனக்கு வண்ணம் கொடு
எனக்கு வண்ணம் கொடு
உன் நேசம் என்னும் வண்ணம் கொடு
(முஜே ரங் தே முஜே ரங் தே
அப்னே ப்ரீத் விச் ரங் தே)
நானே விடியலாகி விழித்தெழுந்தேன்
நானோர் மயிலாகி நடனம் செய்தேன்
(மை(ன்) பன்கே சவேரா ஜாக் உட்டீ
மை(ன்) பன்கே மோர்னி நாச் உட்டீ)
உன் கண்களே என் கண்கள்
என் கண்களில் வண்ணம் கொடு
(தேரே நய்னா மேரே நய்னா
மேரே நய்னோ(ன்) மே(ன்) ரங் தே)

பஞ்சாபி மொழியில் அற்புதமான பல பாடல்கள் பாடிய சூஃபி ஞானி பாபா புல்லே ஷாஹ் அவர்களின் ‘தேரே இஷ்க் நச்சாயா’ என்னும் பாடலின் ஒரு வடிவத்தை ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில் சே’ என்னும் படத்தில் இடம்பெறச் செய்திருந்தார். அந்தப் பாடலும் கவ்வாலி பாடகர்களால் விரும்பிப் பாடப்படும் ஒன்று. குறிப்பாக நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அதனைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய தனித்தன்மையான மெட்டில் அதை வெளிப்படுத்தியிருந்தார்.
பெருநாள் வந்துவிட்டது
என் நண்பன் இன்னும் வரவில்லையே
(ஈத் ஆயீ மேரா யார் நி ஆயா)
உன் காதல் என்னை ஆடவைத்தது
ஒரு பித்தனைப் போல்
கிண்ணத்தில் நிறைந்து வழிந்த
காதலின் விஷத்தை நான் பருகிவிட்டேன்
என் காதலனே வா
இல்லையெனில் நான் செத்தேன் செத்தேன்
(தேரே இஷ்க் நச்சாயா கர் கே தய்யா தய்யா
இஷ்க் தேரா மேரே அந்தர் கீத்தா
பர் கெ ப்யார் கா ப்யாலா பீத்தா
ஆஜா சஜ்னா ஆஜா சஜ்னா
நை தெ மை(ன்) மர் கய்யா கய்யா)


இதே பாடலின் மெட்டில் இன்னொரு பாடல் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. குல்சார் எழுதிய அற்புதமான சூஃபிப் பாடல் அது.
எவரின் தலை மீது காதலின் நிழல் உள்ளதோ
அவரின் பாதத்தின் கீழ் சொர்க்கம் ஆகிவிடும்
(ஜின் கெ சர் ஹோ இஷ்க் கி ச்சாவோ(ன்)
பாவோ(ன்) கெ நீச்சே ஜன்னத் ஹோகீ)
இந்த நிழலில் செல்லுங்கள்
எல்லோரும் இந்த நிழலில் செல்லுங்கள்
பாதங்கள் சொர்க்கத்திற்கு நடக்கட்டும்
(ச்சல் ச்சய்யா ச்சய்யா
சாரே இஷ்க் கி ச்சாவோ(ன்) ச்சல் ச்சய்யா
பாவோ(ன்) ஜன்னத் ச்சலே ச்சல் ச்சய்யா)
நறுமணம் போன்ற அந்த நண்பன்
அவனின் பேச்சோ உருதுவைப் போன்றது
என் மாலையும் இரவும் என் பிரபஞ்சமும்
அந்த நண்பனே என் வாழ்க்கைத் துணை
(வொ யார் ஹே ஜோ ஃகுஷ்பூ கி தரா
வொ ஜிஸ் கெ ஸுபா(ன்) உர்தூ கி தரா
மேரீ ஷாம் ராத் மேரீ காயனாத்
வொ யார் மேரீ சய்யா(ன்) சய்யா(ன்))
மலர்திரையில் மறைவான் சிலநேரம்
மணம் கமழ வருவான் சிலநேரம்
மணம் உண்டெனில் தரிசனமும் ஆகட்டும் எங்கேனும்
தாயத்தாக்கி அணிந்துகொள்வேன் அவனை
புனித வசனம் போல் அடைவேன் எங்கேனும்
நண்பன் அவன் இறைநம்பிக்கை போன்றவன்
என் இன்னிசை அவனே
என் மந்திரம் அவனே
பாதங்களின் கீழ் சொர்க்கப் பூங்காவைக் கொண்டு
நண்பன் அவன் தூய பனித்துளி போல் நடப்பவன்
கிளைகளில் சிலநேரம்
இலைகளில் சிலநேரம்
தென்றலில் சிலநேரம்
தேடுகிறேன் அவன் அடையாளம்
(குல்போஷ் கபீ இத்ராயே(ன்) கஹீ(ன்)
மெஹ்கே தோ நஜர் ஆ ஜாயே(ன்) கஹீன்
தாவீஜ் பனா கெ பெஹ்னூ(ன்) உசே
ஆயத் கி தரா மில் ஜாயே(ன்) கஹீ(ன்)
யார் ஹே வொ ஈமான் கி தரா
மேரா நக்மா வொஹி மேரா கலிமா வொஹி
யார் மிஸாலே ஓஸ் ச்சலே
பாவோ(ன்) கி தலே ஃபிர்தவ்ஸ் ச்சலே
கபி டால் டால் கபி பாத் பாத்
மை(ன்) ஹவா பெ டூண்டூ(ன்) உஸ் கே நிஷான்)
நான் அவனது வடிவத்தின் காதலன்
அவன் வெயில் நிழல் போல் எங்கும் செல்பவன்
அவன் ஆசையாகிப் பல வண்ணங்களில் தோன்றுகிறான்
நான் அந்த வண்ணரூபங்களின் பித்தன்
(மை(ன்) உஸ்கே ரூப் கா ஷைதாயீ
வொ தூப் ச்சான்வ் சா ஹர்ஜாயீ
வொ ஷவ்க் ஹே ரங் பதல்தா ஹே
மை(ன்) ரங் ரூப் கா சவ்தாயீ)”

இப்பாடலில் வரும் “மை(ன்) ஹவா பெ டூண்டூ(ன்) உஸ் கே நிஷான்” என்னும் வரியின் கருத்தைத்தான் வடுகபட்டிக் கவித்திலகம் “பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்” என்று பாடினார். இந்தப் பாடலின் மெட்டுக்கு அவர் எழுதிய வரிகள்: “ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்யா/ நெஞ்சு உச்சுக்கொட்டித் தவிக்குது தய்யா.”

இந்தப் பாடல் இடம்பெற்ற ’தில் சே’ பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு குறிப்பு முக்கியமானது. அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு என்று உருவாக்கப்பட்டவை அல்ல. தனியான சூஃபி ஆல்பமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. எனவே அவற்றின் இசையில் சூஃபி மரபிசைக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியிருந்தார். பின்னால் அவை திரைப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கத்திய வாத்திய இசைகளை அவற்றுடன் இணைக்க வேண்டி ஆயிற்று. குல்சார் எழுதிய இன்னொரு முக்கியமான பாடல் அதில் உள்ளது. ”சத்ரங்கி” என்னும் அந்தப் பாடலும் வண்ணம் என்னும் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சத்ரங்கி என்றாள் ’ஏழு வண்ணங்கள் கொண்டவன்’ என்று பொருள். காதலின் ஏழு நிலைகளை விளக்கும் பாடல் என்று இது எழுதப்பட்டுள்ளது. அந்த ஏழு நிலைகள்:
1.ஹுப் (நேசம்)
2.உன்ஸ் (நெருக்கம் INTIMACY)
3.இஷ்க் (தீவிரமான காதல்)
4.அகீதத் (பிரிவின்மை. இதன் மூலச்சொல்லுக்கு முடிச்சு என்று பொருள்.)
5.இபாதத் (அடிமைத்தனம்)
6.ஜுனூன் (பித்துநிலை)
7.மவ்த் (இறப்பு)

இந்த ஏழு நிலைகளையும் சூஃபி ஞானி ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) தன் பாரகாவியமான “மன்திக்குல் தைர்” (பறவைகளின் பரிபாஷை)யில் விளக்கியுள்ள ஏழு பள்ளத்தாக்குகள் (SEVEN VALLEYS) என்பதுடன் ஒப்பிடலாம். இதில் கடைசி நிலையாக உள்ள மவ்த் என்பது பக்தனின் சுயம் இறைவனில் அழிந்துவிடுகின்ற நிலையைக் குறிக்கும். சூஃபிகளின் ஞானக்கலையில் இது ‘ஃபனா’ என்று சொல்லப்படும். (இந்த ஃபனா என்னும் சொல்லை ஏ.ஆர்.ரஹ்மான் “யாக்கை திரி காதல் சுடர்” என்னும் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.)

(தொடரும்)  



1 comment:

  1. Outstanding Work... குல்ஜார்சாபை பற்றி படித்தாலே எனக்கு குதூகலம் தான். அவரை பற்றி நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    சூஃபிகள் எந்த பக்கம் திரும்பினாலும் எது அருந்தினாலும் எது பேசினாலும் அது இறைவனை பற்றியதாக தான் இருக்கும்.

    அதனால் தான் ரூமி (றஹ்) அவர்கள் இப்படி எழுதினார்கள், “... அல்லாஹ் மலக்குகளை படைக்க போகிறேன் என்று மலக்குகளிடம் சொன்ன போது மலாயிகத்மார்கள் பூமியில் ரத்தம் சிந்துபவர்களையா படைக்க போகிறாய்? என்று கேட்ட போது சூஃபியாக்கள் அவர்களை பார்த்து சிரித்தார்களாம்...”

    உங்களின் எல்லா எழுத்துக்களிலும் கிப்லா தெரிகிறது. வாழ்த்துகள்..

    ReplyDelete