Tuesday, February 25, 2014

இந்தியாவின் கிளி - part 2


அமீர் ஃகுஸ்ரோவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் பால் லோசன்ஸ்கியும் சுனில் ஷர்மாவும் தங்களின் நூலுக்கு “காதலின் கடைவீதியில்” (IN THE BAZAAR OF LOVE) என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். அமீர் ஃகுஸ்ரோ எழுதிய கஜல் கண்ணி ஒன்றிலிருந்து இப்பெயர் எடுக்கப்பட்டுள்ளது:

“என் பக்கம் நீயொரு பார்வை செலுத்த
இறந்துபோகவும் ஆயத்தமாகிவிட்டேன்
பார், காதலின் கடைவீதியில் என்னைப் போல்
எத்தனைப் பேர் மரித்துவிட்டார்கள் என்று!”
(மன் பிதான் நழ்ரம் கெ கர்மீரம் பசூயம் பின்கரீ
பீன் கெ ச்சூ மன் ச்சந்த் கஸ் முர்தாஸ்த் தர் பாஸாரி இஷ்க்)

கிரேக்க ஞானி டயோஜினஸ் பகலில் கைவிளக்கு ஏந்தியபடி ‘மனிதனைத் தேடி’ கடைவீதிகளில் அலைந்த கதையை நாமறிவோம். சூஃபி ஞானிகள் பலரும் மக்கள் பெருக்கம் மிக்க கடைவீதிகளில் சுற்றி அலைந்திருக்கிறார்கள். அவர்கள் தேடி அலைந்ததென்னவோ இறைவனை மட்டுமே!


இதே போன்ற ஒரு பாடலை மௌலானா ரூமியிடம் கேட்கிறோம்:

“வீணாக அல்ல, வீதியிலும் சந்தையிலும்
அலைகின்றேன் நான்
காதலின் வசத்தில் இருக்கிறேன்,
தரிசனத்திற்காக அலைகின்றேன் நான்
(ந மன் பேஹூதா கிர்தே கூச்சாவொ பாஸார் மீ கர்தம்
மஸாக்கெ ஆஷிக்கீ தாரம் பயே தீதார் மீ கர்தம்)

      மௌலானா ரூமியின் கவிதைகளை அமீர் ஃகுஸ்ரோ கேட்டிருக்க வேண்டும். ரூமியின் தாக்கம் அவரிடம் உண்டு என்பது திண்ணம். கவிப்பணியில் அவர் பாரசீகக் கவிஞர் நிஜாமிக்கு இணையாகும் முயற்சியில் ஈடுபட்டு நிஜாமி எழுதிய ’ஷீரீன் – ஃகுஸ்ரோ’ மற்றும் ’மஜ்னூன் – லைலா’ ஆகிய காவியங்களைத் தனது பிரதிகளாக மறு ஆக்கம் செய்து எழுதினார். ஆனால் மௌலானா ரூமிக்கு இணையாகும் முயற்சியைக் கனவிலும் அவர் கருத முடியாது. நிஜாமியும் ஃகுஸ்ரோவைப் போன்றே ஓர் அரசவைக் கவிஞர். ஆனால் மௌலானா ரூமியோ ஆன்மிகக் குருநாதர், இறைநேசர்.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது தான் கொண்ட ஆன்மிகக் காதலுக்கு மௌலானா ரூமி தனது குருவான ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரஹ்) மீது கொண்ட காதலையே அமீர் ஃகுஸ்ரோ முன்மாதிரியாக வரித்திருப்பார் என்று கருதலாம். எனினும் மௌலானா ரூமியின் செப்பமான நிலைக்குத் தன்னால் உயர முடியவில்லை என்பதை அவர் உணர்ந்திருக்கவும் வேண்டும். பின்வரும் கஜல் அப்படி எண்ண இடம் தருகிறது:

      ”வாழ்நாள் கழிந்தது
      இறைவனின் பக்கம் இன்னமும்
முகம் திருப்பவில்லை நான்

அந்தப் பேரின்பப் பொழுதுகளைத்
தேடவில்லை நான்
வாய்ப்புகள் மறைந்துவிட்டன

இதயத்தின் அழுக்கை எப்படிக் கழுவுவேன்?
நான் செய்த அங்க சுத்திகள்
கண்ணீரைப் போல் தாபம் கொண்டிருக்கவில்லை

பாவத்தின் இருளைப்
போக்கவில்லை என் கண்ணீர்

உண்மை மனிதர்களின் வரிசையில்
ஒளிரவில்லை என் முகம்


ஓரிரு இரவுகளேனும்
நாய்களுடன்கூட நான் திரியவில்லை எனும்போது
இரவுகளில் வலம் வரும்
அந்தச் சிங்க இதயம் கொண்டோரின்
பாதையைப் பற்றி நானென்ன அறிவேன்?

காதலின் கோலால்
ஒருபோதும் அடிபடவில்லை
என் இதயத்தின் பந்து

என் பேரரசனின் பிரசன்னத்தால்
பரவசம் கொள்ளவில்லை என் தலை!

படைப்பின் வாசம்கூட எட்டாது
அடைத்திருக்கும் என் நாசி
காதலின் கஸ்தூரியை
எங்கிருந்து நுகரும்?

தீய பழக்கங்களை விட்டுவிடு என்கிறார்கள்
விட்டுவிடுதல் என் பழக்கம் இல்லையே?

என் முழு வாழ்வையும் பொய்களில் போக்கிவிட்டேன்
ஒருபோதும் இறைவனின் முன்
உண்மையாய்ப் பணிந்ததில்லை நான்

கவிதை எனது தொழுநோய் ஆயிற்று
அந்தோ! ஃகுஸ்ரோ ஒருபோதும்
’மௌனம்’ என்று சொன்னதில்லை;
பேச்சை நிறுத்தியதில்லை நான்”

இக்கவிதையின் இறுதிக் கண்ணியில் ஃகுஸ்ரோ பயன்படுத்தியிருக்கும் ‘ஃகாமூஷ்’ (மௌனம்) என்பதுதான் குறிப்புச் சொல். மௌலானா ரூமியின் ‘தீவானே ஷம்ஸி தப்ரேஸ்’ என்னும் காவியத்தில் செம்பாகம் கஜல்கள் இச்சொல் கொண்டு முடிக்கப் பட்டுள்ளன.

      புலனின்பங்களை அள்ளிக் கொட்டும் அரசச் சூழலில் வாழ்ந்தவர் அமீர் ஃகுஸ்ரோ. அரசனின் அவைக்கும் ஆன்மிக குருவின் அவைக்கும் இடையில் அவர் ஆரம்ப காலத்தில் அல்லாடியிருக்க வேண்டும். ”மனமே! நிறைவின் நிலத்தில் உன் கொடியை உயர்த்து” (அய் தில் ‘அலம் ப-முல்க்கெ கனாஅத் புலந்த் குன்) என்று தன் நெஞ்சுக்கு அவர் சொல்லும் அறிவுரை நமக்கும்தான்.

      ’வறுமை எனது பெருமை’ என்பது நபிமொழி. தற்பெருமை அழியும் ஃபனா என்னும் நிலையே வறுமை என்பதன் உட்பொருள். இவ்வறுமை நிலையை எய்தும் வழிமுறைக்கு வெளி வறுமையும் ஓர் உபாயம் ஆகலாம். தேவைகளை நிறைவேற்றும் பொருட்களை மட்டும் தேடிக்கொள்வதும், அதற்கு மேல் குன்றிமணி அளவும் தேடாதிருப்பதும் ஆசைகளை அறுக்கும் வழி ஆகும். அந்நிலையில் தம்மைப் புடம் போட்டுக் கொண்ட சூஃபிகளுக்கு ’ஃபக்கீர்’ என்னும் பெயரும் குறிக்கப் பெறும். இந்நிலையை அடைய அமீர் ஃகுஸ்ரோ முயன்று தன் குருவின் வழிகாட்டலால் வெற்றியும் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரே சொல்வதைக் கேட்போம்:

“உலகப் பண்டங்களின் குவியலை விட்டும்
எமது ஆடைகளை இழுத்துக் கொண்டோம்
எமது அங்கிகளைச் சுருட்டிக் கொண்டு
இரவலர்களின் வீதிக்குச் சென்று விட்டோம்

சகியே! பேரின்ப மது வார்ப்பாயாக!
வானின் நீலக் குடுவையிலிருந்து
நிறையவே அருந்திவிட்டோம்
கண்ணீரை

பூமியின் பச்சை விரிப்பில்
உருண்டு கொண்டிருக்கும்
இந்தக் கறுப்பு வெள்ளை தாயக்கட்டை
மிகவும் சூதானது என்பதறிந்து
எம் ரத்தமே எமது பானமாயிற்று!

வறுமையின் நுட்பங்களே இழைகளாக
நாம் பின்னியிருக்கும் இந்தப் போர்வயால்
தலையை மூடிக்கொள்கிறோம் இன்று

உலக அறுவடை ஒருபோதும்
பேராசைக்காரரின் பையை நிரப்பாது
என்பதறிந்து
எமது லட்சியங்கள் எல்லாம்
நிறம் மாறி விட்டன

கருமானின் கட்டளைக்கல்லை
உடைத்தெறிந்து விடுக;
ஞானத்தில் உரசிப் பார்க்கும்போது
தங்கம் வெறும் மஞ்சள் நிறக் களிமண்தான்!

ஃகுஸ்ரோ! நாம் சிறு பிள்ளைகள் அல்ல
மினுமினுக்கும் மஞ்சள்களையும் சிகப்புகளையும்
தேடித்திரிந்து கொண்டிருக்க;
வளர்ந்துவிட்டவர்களைப் போல் நாமும்
தங்கம் மற்றும் முத்துக்களை விட்டும்
இதயத்தை உயர்த்திவிட்டோம்!"

      இந்த நிலையை ஃகுஸ்ரோ தனது குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களின் சகவாசத்தால் அடைந்தார்கள். குரு, நபியை அடைவதற்கான வாசலாக இருக்கிறார்; நபி(ஸல்), இறைவனை அடைவதற்கான வாசலாக இருக்கிறார்கள். குருவின் மீது கொள்ளும் காதல் நபிக்காதலுக்கு இட்டுச் செல்கிறது; நபியின் மீது வைக்கும் காதல் இறைக்காதலுக்கு இட்டுச் செல்கிறது. அமீர் ஃகுஸ்ரோவின் பாடல்களில் இம்மூன்று நிலைகளும் விரவியுள்ளன, சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் குறியீடுகளால் மறைக்கப்பட்டும்.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அமீர் ஃகுஸ்ரோ பாடியுள்ள பல பாடல்கள் கவ்வாலிக் கலைஞர்களால் மிகப் பரவசமுடன் பாடப்பட்டு உலகப் புகழ் அடைந்துள்ளன. அவற்றில் சில பாடல்களைப் பார்ப்போம்.

      அமீர் ஃகுஸ்ரோ பாடிய ஓர் இலக்கிய வகை ’ரங்’ எனப்படுகிறது. ரங் என்றால் வண்ணம் / நிறம் என்று பொருள். இஸ்லாமிய மெய்ஞ்ஞான சூஃபி உலகிலும், இந்து ஞான மரபிலும் நிறம் என்னும் குறியீடு இறைப்பண்புகளைக் குறிப்பதற்குக் கையாளப்பட்டு வந்ததை அமீர் ஃகுஸ்ரோ அவதானித்திருக்கிறார். எனவே, பாரசீக மொழியையும் இந்தி மொழியையும் இணைக்கும் பணியையும், பாரசீக இசை மரபினையும் இந்திய இசை மரபினையும் இணைக்கும் பணியையும் செய்த அவர் இலக்கிய உலகில் இந்தக் குறியீட்டையும் பயன்படுத்திப் பாடி இந்திய இலக்கிய மரபில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியத்திற்கான ஓர் இணக்கமான இடத்தை நிறுவித் தந்திருக்கிறார் எனலாம்.

      ’ரங்’ (நிறம்/வண்ணம்) என்பது சூஃபிகளின் மெய்ஞ்ஞானத்தில் குறியீடாக அமைவது பற்றி முதலின் தெரிந்து கொள்வோம்.

      ”அல்லாஹ்வின் வண்ணம். வண்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விடவும் அழகன் யார்? அவனுக்கே யாம் அடியவர்கள்” (சிப்கதல்லாஹி; வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா; வ நஹ்னு லஹூ ஆபிதூன் -2:138)

என்று சொல்கிறது குர்ஆன். இவ்வசனத்தில் வரும் ’சிப்கதல்லாஹ்’ (அல்லாஹ்வின் வண்ணம்) என்பதில் சிப்கா (வண்ணம்) என்பது சமயத்தைக் குறிக்கும் என்று அறிஞர் பலரும் பொருள் கொள்கின்றனர். எனினும், அச்சொல் இறைவனின் திருப்பண்புகளைக் குறிப்பதாக சூஃபிகள் பார்க்கின்றனர்.

      குருவும் நபியும் தூரிகைகளே. அவர்கள் நம் மீது தீட்டும் வண்ணங்கள் இறைவனின் திருப்பண்புகளே ஆகும். எனவே, குருவின் மீதான காதலிலும், நபியின் மீதான காதலிலும் சீடன் இறைப் பண்புகளில் தோய்கிறான். குருவின் பண்புகள் சீடனில் வந்துவிடுகின்ற நிலை ஃபனாஃபிஷ் ஷைஃக் (குருவில் அழிதல்) என்றும், நபியின் பண்புகள் சீடனில் வந்து விடுகின்ற நிலை ஃபனாஃபிர் ரசூல் (இறைத் தூதரில் அழிதல்) என்றும், இறைப் பண்புகள் சீடனில் வந்துவிடுகின்ற நிலை ஃபனாஃபில்லாஹ் (இறைவனில் அழிதல்) என்றும் சொல்லப்படும். எதார்த்தத்தில் மூன்று நிலைகளிலும் சீடன் தோய்வது இறைவனின் திருப்பண்புகளில்தான். ஏனெனில், குருவிலும் நபியிலும் பிரதிபலித்துச் சீடனைக் காதலில் மூழ்கடிப்பவை இறைப் பண்புகளே.

      ”மோஹே அப்னே ஹி ரங் மேன் ரங் தே” என்று அமீர் ஃகுஸ்ரோ தனது குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களை நோக்கிப் பாடிய பாடலைக் காண்போம்:

“உங்கள் வண்ணத்தில் என்னை வண்ணமயமாக்குங்கள்
நிஜாம்! நீங்களே எனது தோழர்!
(மெஹபூபே இலாஹி) இறைவனின் காதலரே!

எனது முகத்திரை
உங்களின் தலைப்பாகை
இரண்டிலும் வசந்தத்தின் ஒரே வண்ணம் ஆக்குக!

வண்ணத்தின் விலையாக என்னதான் வேண்டும்?
இதோ, எனது வாலிபம் உங்களுக்கே அர்ப்பணம்!

உங்கள் சபையின் வாசலில் வந்து நின்றுவிட்டேன்
என் மானம் காப்பீர், எனது குருவே! நிஜாமுத்தீன்!”


(to be continued)

2 comments:

  1. இதயத்தை அப்படியே உருக்கி கண்களில் கண்ணீரை வரவழைத்து. பதிவைப்பற்றி கருத்து கூறும் தகுதி எனக்கு இல்லை..வல்ல இறைவன் அருள்புரிவானாக..

    ReplyDelete
  2. இந்த பிளாக்கிற்கு வருவது என்னை பொருத்தமட்டில் ஒரு ஷெய்கை சந்நித்து விட்டு வந்த பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது

    ReplyDelete