Thursday, October 20, 2016

ரூமியின் தோட்டம் - 3

 Image result for sufi heart  

   அறிவியல் பருவுலகைச் சார்ந்து இயங்குகிறது. அதன் கருவிகள் பருப்பொருட்களையே அளக்கின்றன. தொலைநோக்கிகள் எவ்வளவு தூரத்தை அளந்து காண்பித்தாலும், நுண்ணோக்கிகள் எத்தனைச் சிறியதை அளந்து காண்பித்தாலும் அவை பருவுலகின் பொருட்களே. ஆன்மிக அல்லது உயிருலகின் அனுபவங்களை அந்தக் கருவிகள் எப்படி அளக்க முடியும்? தேகத்திற்கும் உயிருக்கும் நடுவே இதயம் இருக்கிறது. இவ்வுலகும் அவ்வுலகும் சந்திக்கும் புள்ளி அது. தேகத்தின் அனுபவங்களையும் அது கிரகிக்கிறது, உயிரின் அனுபவங்களையும் அது உணர்கிறது. எனவே மவ்லானா ரூமி சொல்கிறார்: 

ஆன்மிக அனுபவத்திற்கும்
அறிவிற்கும் இடையில்
இதயமே மொழிபெயர்ப்பாளனாய்
இருக்கிறது.

***
Image result for sufi flute
      

’பசித்திரு’ என்பது ஞானியர் வாக்கு. ஊனை உருக்கி உள்ளொளி பெருக்க பசியொரு நியதி. பசித்தீ அணையா அளவு மட்டும் உண்ணல் ஒரு நெறிமுறை. நோன்பிருத்தல் ஆன்மிக நோய்க்கொரு மருந்து. பசி மிகின் கண்ணைக் கட்டும்; செவி அடைக்கும் என்பர். ஆனால், நோன்பில் அகக்கண்ணும் அகச்செவியும் திறக்கும். விரதம் தரும் புரதம் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

வயிற்றின் வெறுமையில் ஓர் இனிமை உள்ளது

நல்ல வீணைகள் நாம்
அதிகம் இல்லை குறைவு இல்லை

தம்பத்தை ஏதேனும் அடைத்திருந்தால்
ஏது இசை?

மூளையும் வயிறும் நோன்பில் எரிகையில்
தீயிலிருந்து கணந்தோறும்
ஒரு புதிய கானம்

பனிமூட்டம் விலக
பரவசம் பொங்கிப்
படிக்கட்டுக்களில் ஓடுவாய் நீ

வெறுமையாய் இரு
புல்லாங்குழலாய் அழு

வெறுமையாய்
நாணற் பேனாவாய் எழுது

***

      கவிதை, எதைப் பற்றிப் பேசுகிறதோ அதற்கான முன்சுவை நல்கும். கண்டோர் தரும் குறிப்புக்கள் கொண்டு கள்வனின் சித்திரம் தீட்டப்படுதல் போல் ஞானியர் அனுபவித்துக் கண்ட பேருண்மையைச் சொல்லிவிட கவிதை யத்தனிக்கிறது. மவ்லானா ரூமி சொல்கிறார்:

காதலே சத்தியம்
கவிதையோ
அதனிடம் அழைக்கும்
முழவின் ஓசை

***

      படச்சுருளில் எதிர்மமாய் இருக்கும் உருவம் ஒளியின் பாய்ச்சலில் நேர்ம பிம்பமாய் விழுகிறது திரையில். அல்லது, கழுவி எடுக்கப்படும் பிரதியில். இறைவனின் பேரொளி நம்மை வெளிப்படுத்த அவனது திருப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டு நாமும் நேர்ம பிம்பங்களாய்த் தோற்றம் கொண்டோம். எதிர்மப் பண்புகளாய்க் கண்ட நம் மூலப் படிவங்கள் அவனது பேரறிவில் அனாதியாய் அனந்தமாய் உள்ளன. ஆனந்தமாயும்! அவற்றை சூஃபிகள் “அஃயானெ ஸாபிதா” (ஊர்ஜிதப் படிவங்கள், Established Archetypes) என்பர். இறைப்பேரறிவே நம் நிஜ முகவரி. வீட்டை விட்டு நான் வெளியேறவே இல்லை என்னும் உணர்தல் உண்டாகும் கணத்தில் அலைதல் எனும் கனா கலைகிறது. அத்தருணமே வீடுபேறு. மவ்லானா ரூமி சொல்கிறார்:

உருக்கொண்ட ஒவ்வொன்றுக்கும்
அதன் அருவப் படிவம் உளது

தோற்றங்கள் இற்று மடிகின்றன
எப்படி ஆயினும்

முதலும் மூலமும் அழிவதில்லை

ஒவ்வொரு மெல்லிய அழகும்
ஒவ்வொரு மறந்த சுடர் சிந்தனையும்
போய்விட்டதென துக்கம் கொள்கிறாய்

ஆனால் அது அப்படி அல்ல

எவ்விடமிருந்து அவை வந்தனவோ
அவ்விடம் உலர்வதில்லை ஒருபோதும்

என்றைக்குமாய் அஃதொரு
நித்திய நீரூற்று!

ஆன்மா ஒரு நீருற்றெனில்
இவ் உருவெளிக் கோலங்கள் எல்லாம்
முடிவற்ற நீரின் தேக்கத்தினின்றும்
வழியும் நதிகள்

இங்கிருக்க நீ வந்த அக்கணமே
தப்பித்திட ஓர் ஏணி
வைக்கப்பட்டுவிட்டது

தாதாகித் தாவரமாய்ப்
பின்னுமொரு விலங்கானாய்
இது மட்டும் திண்ணம்

மேலும் செல்க

உள்ளுணர்வும் பேரொளியும் கொண்ட
உண்மை மனிதன் ஆகு

நின் தேகம் நோக்கு
இந்தக் குப்பை எங்ஙனம் ஆயிற்று
இப்படியொரு நுண்ணழகு?

இன்னும் உள்ளது பயணம்

மண்வாசம் மறைந்துவிடும்
உயிரின் உலகினுள்

உன்னொரு துளி
நூறாயிரம் இந்தியப் பெருங்கடல் ஆகும்
சமுத்திரம் ஒன்றுண்டு




No comments:

Post a Comment