Tuesday, July 4, 2017

முன்று கவிதைகள்...(04.07.2017)

Related image

அப்படியே மலர்தல்

மிகச் சிறியதுதான்
இந்தச் செடி
எனினும்...

மிகச் சிறியவைதான்
இதன் கிளைகள்
எனினும்...

மிகச் சிறியவைதான்
இதன் கொப்புகள்
எனினும்...

மிகச் சிறியவைதான்
இதன் பூக்கள்
எனினும்...

எத்துனை அழகாய்
மலர்ந்துள்ளது
முழுமை


Image result for old japanese poet

கவியெழுதுதல்

பிஞ்சிலேயே பறித்துவிடாதே
மிக முற்றவும் விடல் வேண்டாம்

திரட்சியின் சரியான பக்குவத்தில்
விளைச்சலை அறுவடை செய்

பெருமரக் கனிகள் எனில்
தானாக உதிர விடு

சிதைந்ததெனினும்
ரசனையுள்ளோர் அறிவார்
அவற்றின் அருஞ்சுவை

நின் தோட்டத்தில் ஒருபோதும்
ரசாயனம் தெளிக்காதே

நின் காய்கறிகளில்
புழுக்கள் நெளிந்தபோதும்
பூச்சிகள் துளைத்தபோதும்
சமையற்காரர் அறிவார்
அவற்றின் பெருஞ்சுவை

Image result for kitchen vegetables

கூவி விற்கலாகாது கண்டீர்

பிரபஞ்ச விவசாயி தரும்
அருட்கொடைகள்தாம்
எம் இல்லத்து அடுமனைக்கு
நாளும் வந்து சேரும் இந்தக்
காய்களும் கனிகளும் எல்லாம்

விலையேற்றம் பற்றி
அன்றாடம் உரையாடல்கள்
எங்கும் போல் இங்கும்

என் சிந்தை மொழியும்
இவர் சந்தை மொழியும்
கிழக்கு மேற்கு

எனினும்,
சந்தர்ப்பப் பிசகாய்
‘அநியாய விலை சார்’ என்று
சொல்லிவைக்கிறேன் அவ்வப்போது,
பால்பல் விழாத பிள்ளை ஒன்று
புரியாத கணிதச் சூத்திரமொன்றை
ஒப்பிக்கும் பாவனையில்

எல்லோரிடமும் சொல்லத் தகுந்ததன்று
முழுமைகூட தகுந்த விலையல்ல
எப்பகுதிக்கும்
என்பதான பகுதிகளால்
ஆனதிந்த முழுமை
என்னும் நற்செய்தி

தேங்கா தக்காளி பீன்ஸு...
கீரை வாழப்பூ உருளக்கிளங்கு...
வண்டியைத் தள்ளியபடி
ஒவ்வொன்றின் பெயராக
உரக்கச் சொல்லிச் செல்கிறார்

அந்த அன்பரும்
ஒருவகையில் அறிவார்தான் போலும்
விலை கூவி விற்கலாகாது இவற்றை
என்னும் அறம்

ஒரு பூ எனினும்
ஒரு காய் எனினும்
ஒரு பழம் எனினும்
பகரமேதும் இல்லை
ஒருபோதும்


No comments:

Post a Comment