Saturday, July 8, 2017

இறைவன் சொல்கிறான்... - part 1

Image result for looking out of window

இறைவன் சொல்கிறான், ‘இவ்வுலகம் என்னும் அழகிய அன்பளிப்பைப் பார். நீ அதனை இலகுவாக எடுத்துக்கொள்கிறாய். ஆனால், எவர் வழியாக நான் எனது வார்த்தைகளை அனுப்புகிறேனோ அவரை? இக்கதவின் அருகில் நின்று அற்புதங்களைக் கவனி. முகபாவனைகள், நரை முடி, அதில் கறுப்பு. நீ ருசிக்கும் எவ்வொரு மங்கிய சுவையும் இறைவனின் உள்ளமையிலிருந்து நேரடியாக வருவதே!” – ஹஸ்ரத் பஹாவுத்தீன் வலத் (ரஹ்...).
      ஜூன் 27, 2017 அன்று, வாட்ஸ் அப் செயலியில் உள்ள எம் பழைய மாணவர் குழுமம் (கி.பி.2000-இல் ஜமால் முகம்மது கல்லூரியில் எம்சிஏ பட்டயம் பெற்றவர்களின் குழுமம்) ஒன்றிலும் எம் குடும்பக் குழுமத்திலும் நண்பர் நாகூர் ரூமி நடத்திவரும் Global Spiritual Group குழுமத்திலும் மேற்காணும் சிறு பத்தியை (ஆங்கிலத்தில்) பதிவேற்றினேன். முன்னாள் மாணவர் குழுமத்தில் பின்வரும் இரண்டு எதிர்வினைகள் வெளிவந்தன.

      ”முற்றிலும் பொய், இதற்கான மேற்கோள் குறிப்பு எங்கே????. மிஸ்டர் தவ்ஃபீக், குர்ஆனில் இந்த வார்த்தைகள் இல்லை” – அப்துல் மாலிக்.

      ”ஆமாம், மேற்கோள் குறிப்புக் கொடுங்கள். ஆதாரமற்ற மேற்கோள் குறிப்பற்ற பல விஷயங்கள் பரப்பப்படுகின்றன. பதிவுகளை முற்படுத்துவதற்கு முன் நாம் பரிசீலனை செய்யவேண்டும்” – இம்தியாஸ்.

      அடியேனின் கைப்பேசி திரையில் கீறல் விழுந்து (நாளொன்றுக்குப் பத்து தடவை கீழே போட்டு எடுத்தால் பளபளக்கவா செய்யும்?) பணிமனையில் செப்பம் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்து நேற்றுதான் (ஜூலை 7, 2017) கைக்கு வந்தது. பழைய இடுகைகளைத் துழாவியபோது இந்தப் பின்னூட்டங்களைக் கண்டேன். அக்கறை உள்ளதாயினும் அவற்றின் அபத்தமும் அறியாமையும் எனக்குக் கிச்சுகிச்சு மூட்டிச் சிரிக்க வைத்தன. பிறகு நிறையவே சிந்திக்கவும் வைத்தன. உடனே, சுருக்கமான ஓர் எதிரிடுகையை ஏற்றினேன்: 
      ”இந்த பதிலூட்டங்களைப் பார்த்த போது நான் சிரித்துவிட்டேன். நான் பதிவிட்ட மேற்கோள் அது ஒரு குர்ஆன் வசன மேற்கோள் என்று ஓரிடத்திலும் சொல்லவே இல்லை. எனவே அந்த அடிப்படையில் அதனைப் புறந்தள்ளுவது நியாயமல்ல”

      வாட்ஸப் குழுமங்களில் பதிவுகள் இடுவதில் இப்படியொரு சிக்கல் இருக்கவே செய்கிறது. அதில் நிதானமாகவும் விரிவாகவும் பேசும் வாய்ப்புக்கள் இல்லை. எந்தக் கோணத்தில் எப்படிப் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் சஹ்ருதயர்கள் கிடைப்பதும் அரிது. எல்லோரும் ஒன்றே போல் வளர்ந்தவர்கள் அல்லவே? எனவே, ’புண்ணூட்டங்கள்’ வந்து விழுவதைத் தவிர்க்க முடியாது. அது பல்வேறு தளங்களில் இயங்கும் மனங்கள் பல கோணங்களில் உரையாடிக்கொள்ளும் இடம். அது, மானாவாரியாகச் செடிகள் மண்டும் நிலம். அதில் பயிர் செய்ய நினைப்பவன் பைத்தியக்காரன்.

      என் இடுகைக்கு மேற்குறிப்பிட்ட பின்னூட்டங்கள் எழுதப்பட்ட குழுமத்தில் பெரும்பான்மையும் முஸ்லிம்களே இருக்கிறார்கள். (”எழுபத்திரண்டு கூட்டங்கள்” என்று நபி (ஸல்...) சொல்லியிருப்பது ஞாபகம் வருகிறது!). அவர்களில் பெரும்பாலோர் மத்தியக் கிழக்கு நாடுகளில் மென்பொருள் செய்வோராய் இருக்கக்கூடும். அவர்களில் பலரும் இப்போது, பதினேழு வருடங்களுக்கு முன் கல்லூரிச் சாலையில் நான் பார்த்த மனநிலை கொண்டவர்கள் அல்லர் என்பது எதார்த்தம். குறிப்பிட்ட காத்திரமான பார்வை கொண்ட சமய மற்றும் சமூக சித்தாந்தங்களால் வடிவமைக்கப்பட்ட ஆளுமைகளாக அவர்கள் இந்நேரம் உருக்கொண்டிருக்க வேண்டும், அவை உண்மையாயினும் பொய்யாயினும், அவை நன்மையாயினும் தீமையாயினும். அகவை நாற்பது ஆகிவிட்டதல்லவா? ஒரு மனிதனின் ஆளுமை, அது எதுவாயினும், பின்னர் மாற்றியமைப்பது கடினம் எனும்படி ஸ்திரம் கொள்ளும் வயது இது.

      என் பழஞ் சகாக்கள் எழுதியிருக்கும் பதிலூட்டங்களின் அடியில் மார்க்க நெறியைக் காத்துக்கொள்ளும் ஓர் அக்கறை சார்ந்த பதற்றம் இருப்பதை உணர்கிறேன். அது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மனிதப் பிறவி வாய்த்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் இயல்புதான் அது. அப்பதற்றத்தின் பின்னணியில் ஓர் ஆழ்ந்த ’அறியாமை’ இருந்து இயக்குவதாக அவதானிக்கின்றேன். ஒருவரின் தன்முனைப்பை மிகவும் சீண்ட வல்ல சொல் ஒன்றை இங்கே பயன்படுத்துகிறேன் என்பதை நான் மறக்கவில்லை. என்ன செய்ய? ”கசக்கும் எனினும் சத்தியமே பேசு” என்பது நபியின் ஆக்ஞை. பாரதி சொல்வது போல், “எனக்கு உண்மை அறிந்தது சொல்வேன்” என்பதென் பிரதிக்ஞை. அதில் தயக்கம் செய்வது தகாது.

      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் தரும் முதுமொழி. அது இவண் பொருந்தும் எனலாம். சகாக்கள் எழுதியிருக்கும் கருத்துக்கள் இற்றை நாள் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சார்ந்த தொகுப்பு நினைவு மனநிலையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். அதனை நாம் ஆராய்தல் வேண்டும்.

      ”முற்றிலும் பொய், இதற்கான மேற்கோள் குறிப்பு எங்கே????. மிஸ்டர் தவ்ஃபீக், குர்ஆனில் இந்த வார்த்தைகள் இல்லை” என்பது முதல் பின்னூட்டம். இரண்டாம் பின்னூட்டமும் இதையே வழிமொழிகிறது.

Image result for the drowned book coleman barks

      முதலில், நான் பதிவேற்றிய மேற்கோளின் பின்னணியைச் சொல்லிவிடுகிறேன். “மூழ்கிய புத்தகம்” என்னும் தலைப்பில் “The Drowned Book” என்னும் நூலை மொழிபெயர்த்து வருகிறேன். அந்நூலின் மூலப்பிரதி பாரசீக மொழியில் ஏறத்தாழ ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. “மஆரிஃப்” என்பது அதன் பெயர். மௌலானா ரூமி (ரஹ்...) அவர்களின் தந்தையான மௌலானா பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) அவர்கள் எழுதியது. ஆங்கிலத்தில் கோல்மன் பார்க்ஸ் அவர்கள் ஜான் மொய்னுடன் இணைந்து அந்நூலின் தேர்ந்த பதிவுகளை மொழிபெயர்த்துள்ளார். அதையே நான் தமிழில் பெயர்த்து வருகிறேன். அந்த ஆங்கிலப் பரிதி நூலின் பின் அட்டையில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கும் பத்தியையே நான் வாட்ஸ் அப் குழுமங்களில் ஏற்றினேன். இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள அந்த மேற்கோளை மீண்டுமொரு முறை படித்துவிட்டு இங்கிருந்து தொடருங்கள்.

      ”முற்றிலும் பொய்” (Totally untrue) என்று அதனை மறுக்கிறார் அப்துல் மாலிக். அந்த மறுப்பின் உறுதிக்குப் பின் இயங்கும் உளவியலை என்னால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது. தொடர்ந்து அந்த முகாந்திரத்தை அவரே சொல்கிறார், குர்ஆனில் இந்த வார்த்தைகள் இல்லை. “இறைவன் சொல்கிறான் என்று வந்தால் அது குர்ஆன் மேற்கோளாகத்தானே இருக்கவேண்டும்? வேறு வழி ஏதும் இல்லையே? வேறு எப்படி ஒருவர் ‘இறைவன் கூறுகிறான்’ என்று சொல்லி ஒரு கருத்தைச் சொல்ல இயலும்? என்பதுதான் மிஸ்டர் அப்துல் மாலிக் அவர்களின் கேள்வியின் பின் இயங்கும் தர்க்கம். இது எளிய ஆனால் போதாமை கொண்ட தர்க்கப்பார்வை. குர்ஆன் என்பது இறைவனின் பேச்சு (கலாமுல்லாஹ்) என்பது சரிதான். ஆனால், ‘இறைவன் சொல்கிறான்’ என்று தொடங்கிக் காட்டப்படும் ஒரு செய்தி குர்ஆனில் இல்லாத நிலையிலும் ஹதீஸ் குத்ஸியாக இருக்கலாம் அல்லவா? உதாரணமாக, “இறைவன் சொல்கிறான்: ’எனது நேசரை எவன் பகைத்தானோ அவன் மீது நான் போர் தொடுக்கிறேன்’” என்று ஒருவர் எழுதினால் அவ்வார்த்தைகள் குர்ஆனில் இல்லை என்பதற்காக ”அது முற்றிலும் பொய்” என்று ஃபத்வா வழங்கிவிட முடியுமா? அது ஹதீஸ் குத்ஸி ஆயிற்றே. (நூல்: சஹீஹ் புஃகாரீ, ஹதீஸ் எண்: 6502; கிதாபுர் ரிகாக் (அத்தியாயம் 38: பாபுத் தவாளுஃ), அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி...). நீண்ட ஹதீஸ் குத்ஸிய்யின் ஆரம்ப வாசகம் இது: இன்னல்லாஹ கால மன் ஆதா லீ வலிய்யன் ஃபகத் ஆதன்த்தஹு பில்ஹர்ப். மேலும், இரண்டாம் நிலை ஆதார ஹதீஸ் கிரந்தம்: அர்-ரியாளுஸ் சாலிஹீன். தொகுப்பாளர்: இமாம் நவவீ (ரஹ்…)). இன்னொரு உதாரணம்: “இறைவன் சொல்கிறான், ‘ஆதமின் மகன் என்னைச் சபிக்கிறான். அவன் காலத்தைச் சபிக்கிறான். நானே காலமாக இருக்கிறேன்’” இந்த வார்த்தைகள், இந்த வாசகம் குர்ஆனில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக இறைவன் சொன்னதுதான். இது ஹதீஸ் குத்ஸி. (நூல்: சஹீஹ் புஃகாரீ, ஹதீஸ் எண்: 4549; அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி...) ‘காலல்லாஹு அஸ்ஸ வ ஜல்ல யூதீனீ இன்னு ஆதம யசுப்புத் தஹ்ர வ அன தஹ்ரு.’). இன்னொரு உதாரணம்: “இறைவன் சொல்கிறான், ’நிச்சயமாக என் கருணை எனது கோபத்தை மிகைத்திருக்கிறது’ (’இன்ன ரஹ்மத்தீ களபத் களபீ’) (நூல்: சஹீஹ் புஃகாரீ, ஹதீஸ் எண்: 3022; அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி...)). இது போல் இன்னும் நிறைய உதாரணங்கள் இதற்குக் காட்டிச் செல்லலாம். விஷயத்தை விளங்கிக்கொள்ள இது போதுமானது. இவ்வார்த்தைகள் குர்ஆனில் இல்லை என்று அறிந்த மாத்திரத்தில் ”டோட்டலி அண்ட்ரூ” என்று முடிவுகட்டிவிடுவது அறிவுடைமை அல்ல.

      ஆக, இறைவன் சொல்கிறான் என்று சொல்லி ஒரு செய்தி சொல்லப்படுமானால் ஒன்று அது குர் ஆனில் இருந்தாக வேண்டும் அல்லது ஹதீஸ் குத்ஸியில் இருந்தாக வேண்டும் என்று ஒரு நியதியை இது வகுக்கலாம் அல்லவா? அப்படியானால் நான் பதிவிட்ட மேற்கோள், ஹஸ்ரத் பஹாவுத்தீன் வலத் சொல்கிறாரே அது, குர்ஆன் மேற்கோள் அல்லவெனில் ஹதீஸ் குத்ஸி மேற்கோளா? என்று கேள்வி எழுகிறது. இல்லை, அது ஹதீஸ் குத்ஸி மேற்கோளும் அல்ல. பிறகு எப்படி ‘இறைவன் சொல்கிறான்’ என்று அவர் அந்தக் கருத்தைச் சொன்னார்? என்று கேள்வி எழுகிறது. இதற்கு விடை சொல்லாமல் புரிதல் என்பது இல்லை. தனக்குத் தானேகூட ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பி விடை காணத்தான் வேண்டும். உண்மையான சிக்கலே இங்கிருந்துதான் தொடங்குகிறது. இதற்கு மேல் புரிதலின் பரப்பிற்குள் செல்ல ஒருவரின் பிரக்ஞை விரிவு கொள்ள வேண்டியுள்ளது. ஒரு முயற்சி செய்துதான் பார்ப்போமே?

      குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லாத வார்த்தைகள் என்ற நிலையில் “இறைவன் சொல்கிறான்” என்று சொல்வதற்கு வேறு சாத்தியங்கள் உள்ளதா என்பதை நாம் ஆராயத்தான் வேண்டும். ‘குர்ஆனில் இந்த வார்த்தைகள் இல்லை’ என்று அப்துல் மாலிக் முன்வைக்கும் நியதியைப் பகுத்தறிவு ரீதியாக அணுகிப் பார்த்தாலே, தஃகீல் செய்தாலே, அதன் போதாமை வெளிப்பட்டுவிடும். ’மொழிபெயர்ப்பு என்பது மூலப் பிரதியின் நிகரி அல்ல’ என்பது மொழியியலின் அடிப்படைப் புரிதல்களில் ஒன்று. எனவேதான் சாதாரண மனிதர்கள் இயற்றும் இலக்கியங்களுக்குக்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் சாத்தியமாகின்றன. வேத வரிகள் மற்றும் தூதர் மொழிகளைப் பற்றிக் கூறவே வேண்டாம். இதன் அடிப்படையில் தர்க்க ரீதியான விவாதத்தை ஒருவர் நிகழ்த்த முடியும். உதாரணமாக, “இறைவன் சொல்கிறான்: அகில உலகங்களின் ரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்றொருவர் சொன்னால், ‘இந்த வார்த்தைகள் குர்ஆனில் இல்லை. இது முற்றிலும் பொய்’ என்று எதிர் வாதம் வைக்கப்படுமானால் அவரின் கதி என்னவாகும்? ஆனால், இந்த வார்த்தைகள், அதாவது இதே வார்த்தைகள் குர்ஆனில் இல்லை என்பது உண்மைதான்! ஏனெனில், இவை தமிழ் வார்த்தைகள், ஆனால் குர்ஆன் என்பது அரபி மொழியில் இருக்கிறது. தர்க்க ரீதியாக வாதம் சரிதான். ஆனால் அந்த வாதத்தின் முடிவாக அவர் அதனைப் பொய் என்று மறுப்பது அவரின் இறைநம்பிக்கையைப் பறித்துவிடும். ஏனெனில் அந்த மறுப்பு, “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்னும் குர்ஆனிய வசனத்தின் மொழிபெயர்ப்பை மறுத்ததன் மூலம் அந்த வசனக்கருத்தையே நிராகரித்த நிலையை எய்திவிடுகிறது. (இந்த மொழிபெயர்ப்புச் சரியல்ல என்று மறுப்பது வேறு. அது வசனக் கருத்தை மறுக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளரின் புரிதலை மறுக்கிறது. எனவே அதில் வசனத்தை நிராகரித்த நிலை ஏற்படாது. இதைக் கவனத்தில் கொள்க.)

      ”இந்த வார்த்தைகள் குர்ஆனில் இல்லை” என்னும் தர்க்க வாதத்தின் போதாமையை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்ப்போம். ”இறைவன் சொல்கிறான்” என்று கூறி, குர்ஆன் அல்லது ஹதீஸ் குத்ஸிய்யின் கருத்தைத் தனது வார்த்தைகளால் ஒருவர் சொன்னால் போதுமானது, அந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் குத்ஸியின் வார்த்தைகளை அப்படியே மூல மொழியிலேயோ அல்லது நேரிட்ட மொழிபெயர்ப்பாகவோ சொல்ல வேண்டிய அவசியமில்லை என்னும் புரிதலை நான் முன்வைக்கிறேன். முதலில், மூல மொழிப் பிரதியில் உள்ள வார்த்தைகளை அப்படியே சொல்ல வேண்டிய தேவையில்லை என்னும் வாதத்தைக் குர்ஆனை வைத்தே விளக்குகிறேன். குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்கள் பெயர் சுட்டப்பட்டுள்ளார்கள் என்பது பரவலாக அறியப்பட்டதே. அவர்களில் சில நபிமார்களின், உதாரணமாக ஆதம், நூஹ், இப்றாஹீம், இஸ்மாயீல், சுலைமான், தாவூது, யூனுஸ், யூசுஃப், மூசா, ஈசா போன்றவர்களின் வரலாறுகள் விளக்கமாகவே சொல்லப்படுகின்றன. இந்த நபிமார்கள் சொன்ன வாசகங்கள் பலவும் குர்ஆனில் மேற்கோளாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, ”(அதற்கு மூசா) கூறினார்: ‘என் இறைவா! என் நெஞ்சை விரிவாக்கு; என் காரியத்தை எனக்கு எளிதாக்கு; என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்துவிடு” (குர்ஆன்: 20:25-27) என்று அல்லாஹ்விடம் மூசா நபி பிரார்த்தனை செய்தார்கள். இப்படிச் சொல்லும்போது இந்த வார்த்தைகள் குர்ஆனில் உள்ளதா? என்று கேட்டால், இந்தத் தமிழ் வார்த்தைகள் குர்ஆனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். குர்ஆனின் மூலப்பிரதியில் அரபி வார்த்தைகளாக இவை இருக்கின்றன: “கால றப்பிஷ்ரஹ்லீ ஸத்ரீ; வ யஸ்ஸிர்லீ அம்ரீ; வஹ்லுல் உக்தத்தம் மின் லிசானீ”. முன்னது குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு. இது குர்ஆனில் உள்ள மூல அரபி வாசகங்கள். ஆனால், குர்ஆனின் இந்த அரபி வாசகங்களே ஒரு மொழிபெயர்ப்புத்தான்!  மூசா நபி இறைவனிடம் பேசும்போது இதே அரபி வாசகங்களையா பேசினார்கள்? அல்லது அல்லாஹு, மூசா நபியிடம் பேசுகையில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்குமாறு அதே அரபி மொழி வாசகங்களையா அவரிடம் பேசினான்? இல்லையே! மூசா நபியின் தாய்மொழி ஹிப்ரானீ (Hebrew) அல்லவா? அந்த மொழியில்தானே அல்லாஹ் அவருக்கு தவ்றாத் வேதத்தை அருளினான்? இது பச்சைப் பிள்ளைகளுக்கும் தெரிந்த புலனம்தானே? அதே வார்த்தைகளைத்தான் நேரடியாகச் சொல்ல வேண்டும், மொழிபெயர்ப்பாகச் சொல்லக்கூடாது என்றால் குர்ஆன் நெடுகிலும், நபிமார்கள் பேசியதாக வரும் சொற்றொடர்கள் எல்லாம் அந்நபிமார்களின் மொழிகளில், ஹிப்ரானீ, சுர்யானீ, யுனானீ முதலிய மொழிகளில் அமைந்திருக்க வேண்டியதாகி விடுமே? அப்படி இல்லாமல் அரபி மொழிபெயர்ப்பாகவே அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அல்லாஹ்வே மொழிபெயர்த்திருக்கிறான்! அவனொரு மொழிபெயர்ப்பாளன்!

Bro.Dr.Nagoor Gani

      சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மிகவும் கவலையுடன் கேட்டார், “எனக்கு அரபி தெரியாது. தமிழ்தான் தெரியும். மண்ணறையில் முன்கர் நகீர் வந்து என்னிடம் அரபியில் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்லுவேன்? இல்லை, அவர்கள் தமிழில் என்னிடம் கேட்பார்களா?” அதற்கு நான் அவரிடம் சொன்னேன், “கவலைப்படாதீர்கள். தெரியாத மொழியில் கேள்வி கேட்டு தண்டனை தருவது நீதமல்ல. அல்லாஹ் ஒருபோதும் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான். முன்கர் நகீர் உங்களிடம் தமிழில்தான் கேள்வி கேட்பார்கள்! ஒருவேளை அவர்கள் அரபியில் கேள்வி கேட்டாலும் அல்லாஹ் அதை உங்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுவான். அவன் கருணையாளன். உங்கள் சார்பாக அவனே பதில் சொல்லிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!” இதையும் தாண்டி விளக்கம் சொல்ல முடியும். மகான்கள் பலர் சொல்லியுமிருக்கிறார்கள். இதுவே அவர் நிலைக்குப் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.

      இங்கே நபிமார்கள் பேசிய கருத்துத்தான் முக்கியம். அவர்கள் சொன்ன மூல மொழி வார்த்தைகள் அல்ல. பெயர்க்கப்பட்ட மொழியில் சொல்லி அதை அவர்கள் சொன்னார்கள் என்று சொல்வதில் தவறேதுமில்லை என்பதைக் குர்ஆனில் அல்லாஹ் காட்டியிருக்கிறான் என்ற அடிப்படையில், குர்ஆன் மற்றும் ஹதீஸ் குத்ஸியின் மொழிபெயர்ப்பு வாசகங்களை அரபி அல்லாத வேறு மொழியில் சொல்லி, அது நரிக்குறவனின் மொழியாகவே இருந்தாலும் சரிதான், “அல்லாஹ் சொல்கிறான்” என்றோ ‘இறைவன் சொல்கிறான்’ என்றோ குறிப்பிடுவதில் தவறில்லை என்பதற்குக் குர்ஆனே ஆதாரமாக இருக்கிறது.

      இனி, மூல வாசகத்தின் நேரிட்ட மொழிபெயர்ப்பே அன்றி அதன் கருத்தை வேறு விதத்தில் சொல்லி வெளிப்படுத்துவதும் இருக்கிறது. உதாரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட ஒரு ஹதீஸ் குத்ஸி வாசகத்தை எடுத்துக்கொள்வோம். “இன்னல்லாஹ அஸ்ஸ வ ஜல்ல கால இன்ன ரஹ்மத்தீ களபத் களபீ”. இதை நேரிட்ட (ஆனால் துல்லியமான என்றல்ல) மொழிபெயர்ப்பாகத் தமிழில் சொல்ல வேண்டுமெனில், “நிச்சயமாக அல்லாஹ் சொல்கிறான்: திண்ணமாக என் கருணை எனது கோபத்தை மிகைத்திருக்கிறது” என்று சொல்லலாம். இக்கருத்தை மட்டும் முன்வைத்துப் பேசும் நிலையில், ‘இறைவன் சொல்கிறான்: எனக்குக் கடுமையாகக் கோபம் வரும். ஆனால் அதை விட என் கருணை ரொம்பவும் பெரிசு’ என்று சொல்லும்போது வார்த்தைகள் நேரிட்ட மொழிபெயர்ப்பாக இல்லை எனினும் கருத்து அந்த ஹதீஸ் குத்ஸியினுடையதாகவே இருக்கிறது. இது ’தஃப்ஸீரி இல்கா’ விரிவுரை வெளிப்பாடு ஆகும். வார்த்தைகள் கண்ணியமானவையாக இருக்கும் எனில், மூல வாசகத்தின் கருத்தினைத் துலக்குவதாக இருக்கும் எனில் இவ்வெளிப்பாட்டில் தவறேதுமில்லை.

      இன்னொரு உதாரணம். “காலல்லாஹு தஆலா ஃபீ குர்ஆனில் மஜீத் இன்னனீ அனல்லாஹ் லா இலாஹ இல்லா அன ஃபஃபுதுனீ”. இந்த அரபி மேற்கோள் குர்ஆனில் அல்லாஹ், மூசா நபியிடம் பேசுமொரு வாசகத்தை முன்வைக்கிறது (சூரா தாஹா; 20:14). இதனை அரபும் தமிழும் கலந்தபடி இப்படி மொழிபெயர்க்கலாம்: “நிச்சயமாக நான்தான் அல்லாஹ்; என்னை அன்றி இலாஹ் வேறில்லை, எனவே, எனக்கே இபாதத் செய்க”. இதனையே அரபியில்லாது முழுதும் தமிழாக (அல்லாஹ் என்னும் பெயர்ச்சொல்லை மட்டும் தக்கவைத்துக்கொண்டு), நேரிட்ட மொழிபெயர்ப்பாகச் சொல்லலாம்: “அல்லாஹ் சொல்கிறான்: நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னை அன்றி தெய்வம் வேறில்லை. எனவே என்னையே வணங்குவீராக”. இவ்வசனத்தின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு இப்படியும் சொல்லலாம்: “இறைவன் சொல்கிறான்: நிச்சயமாக நானே இறைவன். என்னை விட்டால் உனக்கு வேறு தெய்வமுண்டோ? என்னை வணங்குவதைத் தவிர வேறு கதி உனக்கு இருக்கிறதா?” இந்த மூன்றாம் நிலை மொழிபெயர்ப்பில் மூல வசனத்தின் வார்த்தைகளுக்கு நேரிட்ட தமிழ்ச் சொற்கள் இல்லாவிடினும் அதன் கருத்தையே இது விரிவாக்கமாக (தஃப்ஸீரி) வெளிப்படுத்துகிறது. எனவே இதில் தவறேதுமில்லை. இறைவன் சொல்கிறான் என்றுதான் இதனைச் சொல்ல முடியும், இறைவன் அல்லாது வேறு யாராவது சொல்வதாக அதைச் சொன்னால் அது உண்மையாக இருக்க முடியுமா? இறைவனை அன்றி வேறு யாரேனும் அப்படிச் சொன்னால் அது இணைவைப்பாகிவிடுமே! எனவே, ‘இறைவன் சொல்கிறான்’ என்று சொல்வதுதானே இறை நம்பிக்கையைக் காப்பாற்றும்?


      இனி, பஹாவுத்தீன் வலத் (ரஹ்...) போன்ற ஒரு ஞானி எழுதிச்செல்லும் பத்திகள் எல்லாம் இது போன்றல் தஃப்சீரி (விரிவுரை) தன்மையில் அமைந்திருப்பதுடன், அகப்பார்வை (தப்ஸீரி) தன்மை கொண்டதாகவும் இருப்பதால் மேம்போக்கான அணுகுமுறைக்கு மிகவும் சிக்கலானவை ஆகின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு மார்க்கக் கல்வியிலும் ஆன்மிகப் பயிற்சிகளிலும் ஆழமான நெடிய உழைப்பைக் கோருகின்றன. அஃதிலார்க்கு இச்சொற்கள் தம் தாழ் திறவா.

to be continued... 

No comments:

Post a Comment