Saturday, September 16, 2017

அமர வாழ்வு நல்குவாய்



Related image

      கவிக்கோ அப்துல் ரகுமான் பல காலம் புதுக்கவிதைகள் எழுதிய பின் அதனைச் சலித்து மீண்டும் மரபுக் கவிதை எழுதும் ஆர்வம் உந்த எழுதிய நூல் “தேவகானம்” (2011).

      மரபுக் கவிதை வடிவங்கள் பல உள. அதில் எதைத் தேர்ந்து எழுதுவது என்று அவர் சிந்தித்தபோது பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் இயற்றிய பாடல் ஒன்று அவர் மனத்தில் எழுகிறது. “நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே…”. அந்த யாப்பின் சந்தத்திலேயே மெய்ப்பொருட் சிந்தனைகள் மிளிரும் பாடல்கள் எழுதுவது என்று அவர் முடிவு செய்கிறார். அவ்வண்ணம் இயற்றிய முந்நூற்று ஐம்பத்தைந்து விருத்தப் பாக்கள் இந்நூலில் உள்ளன.

      அதன் முதலிரண்டு பாடல்கள் பிராத்தனைகளாக அமைந்துள்ளன:

      ”புகழெலாம் அவனதே
      புவிகளுக்குத் தலைவனாம்
      மிகுந்த அன்போடு அருளினன்
      மீட்கும் நாளின் அதிபதி
      உகந்து நாம் வணங்குவோம்
      உதவி யாவும் வேண்டுவோம்
      தகுந்த பாதை காட்டுவான்
      தவறு நீக்கிக் காப்பனே” (1)

      ”தூயதான சோதியே!
      தொழுதுனை வணங்கினேன்
      மாயப் பொய்மை நீக்கி என்னை
      மெய்ம்மையில் செலுத்துவாய்
      தீயதாம் இருளை நீக்கி
      ஒளியிலே செலுத்துவாய்
      மாயும் தன்மை நீக்கியே
      அமர வாழ்வு நல்குவாய்” (2)

      இவற்றுள், முதற்பா குர்ஆனின் முதல் அத்தியாயமான ”அல்-ஃபாத்திஹா” என்பதன் ஏழு திருவசனங்களின் கருத்துக்களைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

      இரண்டாவது பா யஜூர் வேதத்தின் வெண் பாகத்தில் (ஷுக்ல பக்‌ஷம்) அமைந்த ப்ருஹதாரண்யக உபநிஷத் (பெருங்காட்டு ஞானவுரை) என்பதில் உள்ள பிரார்த்தனை ஒன்றின் தமிழாக்கம். 
 Image result for upanishads

அந்த இறைவேட்டல் மூன்று சிறு வாசகங்களால் ஆனது. சிறு வாசகங்கள் என்றாலும் ஞானத்தால் அவை பெரு வாசகங்கள், திருவாசகங்கள். அது இது:

“ஓம் அஸதோ மா சத் கமய |
தமஸோ மா ஜ்யோதிர் கமய |
ம்ருத்யோ(ர்) மா அம்ருதம் கமய |
ஓம் ஷாந்த்திஹ் ஷாந்த்திஹ் ஷாந்த்திஹ்||

”இறைவா! என்னைப் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு, இருளிலிருந்து பேரொளிக்கு, மரணத்திலிருந்து அமர வாழ்விற்கு வழிநடத்துவாயாக!” என்பது இதன் திரண்ட பொருள்.
  Related image

     இந்த மூன்று வைர வரிகளின் கருத்துக்கள் குர்ஆனிலும் மூவிடங்களில் ஒளிவீசுவதைக் காண்கிறேன்.

      ”மேலும் கூறுக: சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது.
      திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே”
      (வ குல் ஜாஅல் ஹக்கு வ ஸஹக்கல்பாத்தில்
       இன்னல் பாத்தில கான ஸஹூக்கா – 17:81)
என்பதில் நமக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டுதலும்,

      ”அல்லாஹ் நம்பிக்கையாளரின் பாதுகாவலன்.
      இருளிலிருந்து பேரொளிக்கு
அவர்களை வெளியேற்றுகிறான்”
(அல்லாஹு வலிய்யுல்லதீன ஆமனூ
யுஃக்ரிஜுஹும் மினழ்ழுளுமாத்தி இலந்நூர் -2:257)
என்பதில் இருளிலிருந்து பேரொளிக்கு என்னும் வழிகாட்டுதலும்,

      ”நம்பிக்கையாளர்களே!
      அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் பதிலளியுங்கள்
      உம்மை உயிரூட்டுவதற்கு அழைக்கும்போது”
      (யா அய்யுஹல்லதீன ஆமனுஸ்தஜீபூ
       லில்லாஹி வ லிர்ரசூலி
       இதா தஆக்கும் லிமா யுஹ்யீக்கும் -8:24)
என்பதில் மரணத்திலிருந்து அமர வாழ்விற்கு வழிகாட்டுதலும் உள்ளன.

      உபநிஷத் மந்திரம் மும்முறை ஷாந்த்திஹ் (சாந்தி – பேரமைதி) என்று சொல்லி முடிகிறது. இஸ்லாம் என்னும் சொல்லின் பொருளும் அதுவே.

1 comment:

  1. ஆஹா....

    நூல் அறிமுகத்திற்கு நன்றி. புத்தகம் ஆர்டர் போட்டுவிட்டேன்.

    ReplyDelete