Saturday, February 24, 2018

2 POEMS






















அடைக்கும் தாழ்

சில சமயம் தோன்றும்
நானொரு மனிதனா என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் பாவம் என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்களுடன்தான் வாழ்கிறோமா என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் இனிமையானவர்கள் என்று

சில சமயம் தோன்றும்
மனிதர்கள் மோசமானவர்கள் என்று

அவ்வப்போது இப்படியெல்லாம்
தோன்றிக்கொண்டேதான் இருக்கும்

இதில்
அலட்டிக்கொள்வதில்
அர்த்தம் என்ன அன்பே!

***





















painting by Robert Mullenix

மழையாசை

வானம் மூடிக்கொண்டிருக்கும்
இக்காலைப் பொழுதில்
மனதில் இறகு கோதுகின்றது
மழையெதிர்பார்ப்பு

கைப்பேசியும் சைகை
காட்டுகிறதாம்
‘மழை வரும்’ என்கிறாள்

வானிலை அறிக்கையை
ஒரு கவிதையைப் போல்
ரசிக்கின்றேன்

நாசியைக் கூர்தீட்டித்
தேடுகின்றேன்
காற்றில் உணரலாகும்
ஒரு மெல்லிய வாசமாய்
வருமழையின் மூச்சு

அவளைப் பார்த்தபடி
உவமிக்கிறது மனம்
மழையின் வருகை
உன் வருகை போலிருக்கும்
என

நிலக்கடலை
அவித்து வைத்தால்
நன்றாக இருக்கும் என்றும்
ஆவி பறக்கும்
கப்பக்கிழங்கு மட்டுமே
உன்னதமான பொருத்தம் என்றும்
மனம் போடுவதெல்லாம்
ஒரு தினுசான கணக்கீடுகள்தான்

வாங்கி வந்த
விரலி மஞ்சளையும்
மல்லியையும்
வெய்யில்லில் உலர்த்தவேண்டுமே என்று
கவலை தெரிவிக்கிறார்
(என் பிள்ளைகளின்)
நன்னிமா

மழையாசையே
ஓர் ஆனந்தமாய்
அனுபவித்துக்கொண்டும்
’ஆமீன்’ என்கிறது
என் ஆத்மா

***

குறிப்பு: ’ஆமீன்’ என்பது நமது அல்லது பிறரின் பிரார்த்தனைக்கான முத்திரைச் சொல். ‘அப்படியே ஆவதாகுக’ என்று பொருள்.


Friday, February 23, 2018

இமாம் ஷாஃபியும் சூஃபித்துவமும்














ஜிப்ரீல் ஃபுஆத் ஹத்தாத்
தமிழாக்கம் : ரமீஸ் பிலாலி




      






imaam shaafi dargah, cairo, egypt.

 போதிய மார்க்க அறிவு ஒருவருக்கு இருக்கும் எனில் அவருக்கு சூஃபித்துவத்தை இமாம் ஷாஃபி (ரஹ்...) பரிந்துரைத்தார்கள்.
      தமது ’தீவான்’-இல் (கவிதைத் தொகுப்பில்) அவர்கள் அறிவித்தார்கள்:
      ”மார்க்கச் சட்ட அறிஞராகவும் சூஃபியாகவும் இரு
      இரண்டில் ஒன்றாக மட்டும் அல்ல.
      நிச்சயமாக, அல்லாஹ்வின் பொருட்டு
உனக்குச் சொல்கிறேன் இதை.
முன்னவர் இறுகிப்போனவர்
அவரின் இதயம் பக்தியைச் சுவைப்பதில்லை
பின்னவரோ அறிவிலி
அவரிடமிருந்து எந்த நன்மையுமில்லை”
      (ஃபகீஹன்வ்வ சூஃபிய்யன் ஃபகுன் லைச வாஹிதன் / ஃப இன்னீ வ ஹக்கில்லாஹி இய்யாக்க அன்ஸஹு / ஃபதாலிக காஸின் லம் யதுக் கல்புஹு துகன் / வஹாதா ஜஹூலுன் கைஃப துல்ஜஹ்லி யஸ்லுஹு – அஷ்ஷாஃபி, தீவான், பாடல்:45)
      இது இமாம் சூஃப்யானுத் தவ்ரி (ரஹ்...) சொன்னதற்கு ஒப்பாக இருக்கிறது:
      ”மக்களில் மிகவும் சிறந்தவர் மார்க்கச் சட்டத்தைக் கற்றுள்ள சூஃபியே” (அல்-ஹரவி அல்-அன்சாரி அவர்கள் தமது ‘தபக்காத்துஸ் சூஃபிய்யா’ என்னும் நூலில் காடியுள்ள மேற்கோள்.)
       சூஃபித்துவம் மற்றும் சூஃபிகள் பற்றி இமாம் ஷாஃபி (ரஹ்...) அவர்கள் சொன்னவை:
      ”பத்து ஆண்டுகள் நான் சூஃபிகளின் உடனிருந்தேன். அவர்களிடமிருந்து இரண்டு கருத்துக்களை எனக்குப் பயனுள்ளதாக அடைந்துகொண்டேன்:
      ’நேரம் ஒரு வாள்: நீ அதை வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டும்’
      ‘இழப்பே பாதுகாப்பு’
      (குறிப்பு: இமாம் அல்-பைஹகீ அவர்களின் ’மனாகிபுஷ் ஷாஃபீ’ (2:208); இப்னுல் கய்யிம் அவர்களின் ‘மதாரிஜுஸ் சாலிகீன்’ (3:128) மற்றும் ‘அல்-ஜவாபுல் காஃபி’ (பக்.208-209); அல்-சுயூத்தி அவர்களின் ’தஃயீதுல் ஹகீக்கத்துல் அலிய்யா’ (ப.15)).
      சில பிரதிகள் ‘மூன்று கருத்துக்கள்’ என்று குறிப்பிட்டு இன்னொரு கருத்தினையும் தருகின்றன:
      ”உன் மனதை நீ சத்தியத்துடன் ஈடுபடுத்தி வைக்கவில்லை எனில் அது உன்னை பொய்மையுடன் ஈடுபடுத்தி வைக்கும்”
      இமாம் ஷாஃபி (ரஹ்...) அவர்கள் சொன்னார்கள்: “ஒரு பகுத்திறிவாளி சூஃபி ஆகவில்லை எனில் அவனொரு மூடனாகவே அன்றி நண்பகலை அடைவதில்லை!” (யூனுஸ் இப்னு அப்துல் அஃலா அவர்களின் அறிவிப்பாக ‘ஹில்யா’ என்னும் நூலில் அபூ நுஐம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்)
      இந்த மேற்கோளுக்கு அப்படியே முரணாகவுள்ள பிரதியும் இருக்கிறது: “ஒரு முட்டாளாக நண்பகலை அடைபவனாகவே அன்றி ஒரு பகுத்தறிவாளி சூஃபி ஆவதில்லை!” (அல்-பைஹகீ அவர்களின் ‘மனாகிப்’ (2:207); இப்னுல் ஜவ்ஸியின் ‘சிஃபாத்துஸ் ஸஃப்வா’ (1:25) மற்றும் ’தல்பீஸ் இப்லீஸ்’ (1985 பதிப்பு, ப.447); இப்னு தைமிய்யாவின் ’இஸ்திகாமா’ (ப.414))
      [ஜிப்ரீல் ஹத்தாத் அவர்களின் குறிப்பு: இமாம் பைஹகீ அவர்கள் இதனை அல்-ஹாகிமிடமிருந்தும், அவர் அபூ முஹம்மது ஜாஃபரிப்னு முஹம்மதிப்னுல் ஹாரிஸிடமிருந்தும், அவர் அல்-ஹசனிப்னு முஹம்மதிப்னுல் தஹ்ஹாக் (இப்னு பஹ்ரு)விடமிருந்தும் அறிவிக்கிறார்கள். இந்தக் கடைசி இரண்டு நபர்கள் நம்பகமானோர் அல்லர். மேற்சொன்ன இரண்டு பிரதிகளில் இந்த இரண்டாம் பிரதியே சூஃபிகளை எதிர்ப்போரால் தேர்ந்தெடுக்கப்படுவதில் வியப்பில்லை]
      [தமிழ்ப் பெயர்ப்பாளன் ரமீஸ் பிலாலி எழுதும் விளக்கம்: நண்பகல் என்று இமாம் ஷாஃபி அவர்கள் குறியீடாக ஒரு மனிதனின் நடுத்தர வயதை, குறிப்பாக நாற்பது என்னும் அகவையைக் குறிப்பிடுகிறார்கள். அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டால் இருபது வயதில் பகுத்தறிவாளியாக இருக்குமொருவன் நாற்பது வயதில் சூஃபியாகவில்லை எனில் அவனொரு முட்டாளாகத்தான் இருப்பான் என்று முதல் பிரதி மேற்கோளைப் புரிந்துகொள்ளலாம். இது எப்படி எனில், ’இருபது வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை எனில் அவனின் அறிவில் குறைபாடு உள்ளது; நாற்பது வயதிலும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான் எனில் அவனின் அறிவில் குறைபாடு உள்ளது!’ என்று சொல்லப்படுவதைப் போன்றது (இதனை பல ஆண்டுகட்கு முன்பு ஒரு பேட்டியில் முஸ்லிம் லீகின் இன்றைய தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் சொல்லக்கேட்டேன்.)
      இரண்டாம் பிரதி மேற்கோளை நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன்: அதாவது, ஒரு மனிதன் சராசரி அறிவு கொண்ட பொது மக்களின் பார்வையில் பெரிய பகுத்தறிவாளனாக இருக்கலாம். ஆனால், அவன் சூஃபி ஆகிவிட்டான் எனில் அவனது அறிவின் உயர்வை அல்லது ஆழத்தை அந்தப் பொது மக்கள் கிரகிக்க இயலாமையால அவனது பேச்சு அவர்களுக்குக் குழப்பமாகவும் உளறல் போன்றும் அல்லது இன்னும் அபாயமாக, அவனது பேச்சு மார்க்கத்திற்கு எதிரானதாகத் தோன்றவே அவர்கள் அவனொரு மூடனாகிவிட்டான் என்று கருதுவார்கள். ஆனால் அந்த சூஃபியோ இறைவனின் உவப்புக்குரிய இறைநேசராக இருப்பார் என்பதாகும்.]


     









 இமாம் நவவி (ரஹ்...) அவர்கள் எழுதிய ஒரு நூலின் பெயர் “பூஸ்தானுல் ஆரிஃபீன் ஃபிஸ்-ஸுஹ்து வத் தஸவ்வுஃப்” (”துறவு மற்றும் சூஃபித்துவம் ஆகியவற்றை அறிந்த ஞானிகளின் பழத்தோட்டம்”). அந்நூலில் இடம்பெற்றுள்ள, இமாம் ஷாஃபி (ரஹ்...) அவர்களின் கருத்து: “அகத்தூய்மையாளர்கள் (அல்-முஃக்லிஸ்) மட்டுமே முகஸ்துதி (அல்-ரியா) என்பதைக் கண்டறிய முடியும்” [தமிழ்ப் பெயர்ப்பாளனின் குறிப்பு: ஸுஹ்து என்பது சூஃபித்துவத்தில் ஒரு முக்கியமான பண்பாகும். அது இங்கே தமிழில் துறவு என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இல்லற வாழ்வைத் துறந்துவிடும் நிலை அல்ல. அந்நிலைக்கு அறபியில் ரஹ்பானிய்யத் என்று பெயர். அதற்கு இஸ்லாமில் இடமில்லை. ‘லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்’ (இஸ்லாமில் துறவு என்பதில்லை) என்று நபிகள் நாயகம் குறிப்பிடுவது அதனையே. ஸுஹ்து என்பது இல்லறத்தில் இருந்தபடியே உலக ஆசைகளை மனதை விட்டும் நீக்கிவிடுவதும், ’போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று தமிழ் முதுமொழி சொல்வதுபோல், தேவைக்கு அதிகமாக உலகில் எப்பொருளையும் அடையாதிருப்பதும் ஆகும்].
      இமாம் நவவி (ரஹ்...) அவர்கள் இதற்குத் தரும் விளக்கம்: “இதன் அர்த்தம் என்னவெனில், அகத்தூய்மையை உண்மையாகவே தீவிரமாக நாடுகின்ற (அராத) ஒருவரை அன்றி வேறு எவராலும் முகஸ்துதியின் உண்மையான நிலையையும் அதன் மறைவான நிழல்களையும் கண்டறிய முடியாது என்பதுதான். அகத்தூய்மையைத் தீவிரமாக நாடுபவர் நெடுங்காலம் முயல்கிறார், தேடுகிறார், தியானிக்கிறார், தன்னுள் மிக நெடிய சோதனைகள் செய்கிறார். பிறகே அவர் முகஸ்துதியை அறிகிறார், அல்லது அதனைப் பற்றிக் கொஞ்சமாவது அறிவு உண்டாகிறது. இது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. சொல்வதெனில், இது சிறப்பானவர்களுக்கு (அல்-ஃகவாஸ்) மட்டுமே நிகழ்கிறது. ஆனால், யாரேனும் ஒருவன் தனக்கு முகஸ்துதி என்றால் என்னவென்று முழுமையாகத் தெரியும் என்று பீற்றுவானே எனில் அது அவனது அறியாமையே அன்றி வேறில்லை” (நூல்: ‘பூஸ்தானுல் ஆரிஃபீன்’, பக்.53-54).
      மக்கா நகரிலிருந்தபோது இமாம் ஷாஃபி (ரஹ்…) அவர்கள் ஃபுளைலிப்னு இயாத் (ரஹ்…) அவர்களின் மாணவராக இருந்தார்கள். அவர்கள், ஆடு மேய்க்கும் இடையராகவும் துறவியாகவுமிருந்த ஷைபான் அல்-ராயீ அவர்களிடம் சூஃபித்துவத்தில் தீட்சை பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த குருவைப் பற்றி அதிகமாக அறியப்படவில்லை. அவர்களிருவரும் சந்தித்துக்கொண்டது பற்றி எக்குறிப்புமில்லை. ஷைபான் அவர்கள் தன்னுடன் சேர்ந்து நடந்தே ஹஜ் யாத்திரை சென்றதாகவும் அப்போது அவர்கள் சிங்கம் ஒன்றைப் பழக்கி அதன் காதைப் பிடித்துத் திருவியதைத் தான் பார்த்ததாகவும் சுஃப்யானுத் தவ்ரி (ரஹ்...) அறிவிக்கிறார்கள். (அபூ நுஐமின் ‘ஹில்யா’ (1985 பதிப்பு 7:68-69). இந்நூலில் அவர் நிகழ்த்திய பிற அற்புதங்கள் (கராமாத்) பற்றிய பதிவுகளும் உள்ளன; அத்தஹபியின் சியர் (7:203)).
அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரிவானாக, அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!

Wednesday, February 21, 2018

அல்லாஹ் : எப்போதும் போலவே இப்போதும்



(இஸ்லாமிய இறையியற் கட்டுரை)













ஜிப்ரீல் ஃபுஆத் ஹத்தாத்
தமிழில்: ரமீஸ் பிலாலி

      ”அல்லாஹ் அனாதியாக (எப்போதுமே) இடம் என்பதின்றி இருந்தான். அவன் எப்போதும் இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறான்”. இந்தக் கூற்று, அறிவிப்பாளர் தொடர்பின்றி , அலி இப்னு அபிதாலிப் (ரலி...) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. (”அல்-ஃபர்க் பைனல் ஃபிராக்” என்னும் நூலில் (ப.256) அப்துல் காஹிருல் பக்தாதி அவர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது). இப்னு அதா அல்-சிக்கந்தரி அவர்கள் இதனைத் தனது ”ஹிகம்” நூலில் மேற்கோள் காட்டியுள்ளார் (எண்:34).
      நபி (ஸல்...) அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ் இருந்தான். அப்போது அவனுடம் எதுவுமே இருக்கவில்லை. அவனது அர்ஷ் (ஆட்சியாசனம்) நீரின் மீதிருந்தது. அனைத்தின் பதிவில் அவன் எழுதினான். அவன் வானங்களையும் பூமியையும் படைத்தான்” (நூல்: சஹீஹ் புகாரி; பாடம்: படைப்பின் ஆரம்பம்).
      இமாம் அபூஹனீஃபா (ரஹ்…) (இறப்பு: ஹிஜ்ரி 150) சொன்னார்கள்: ”அர்ஷைப் படைப்பதற்கு முன், அமரவும் சாயவும் தேவைப்பட்டு அவன் ஓர் இடத்தில் இருந்திருப்பான் எனில், ‘அல்லாஹ் எங்கிருந்தான்?’ என்னும் கேள்வி அவனுக்குப் பொருந்தியிருக்கும். ஆனால் அது சாத்தியமில்லை.” (நூல்: வசிய்யத்துல் இமாம் அபூ ஹனீஃபா, ப.10)
      அஷ்-அரீ இமாம் இப்னு அபதுஸ் சலாம் தனது கொள்கை அறிவிப்பில் சொல்கிறார்கள்: “இடத்தையும் காலத்தையும் உள்ளமைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே அவன் இருந்தான். அவன் எப்போதும் இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறான் (ஹுவல் ஆன கமா கான)” (நூல்: ரசாயிலுத் தவ்ஹீது ப.11)

     













 இதைப்போலவே, இமாம் அபுல் ஹசன் அல்-அஷ்அரீ அவர்களின் நிலைப்பாடும் அபுல் காசிம் இப்னு அசாகிர் அவர்களால் பின்வருமாறு கூறப்படுகிறது: “நஜ்ஜாரியாக்கள் சொன்னார்கள்: ’உள்ளிருத்தல் (ஹுலூல்) என்பதும் திசை (ஜிஹத்) என்பது இல்லாது அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்’. ஹஷ்வியாக்களும் முஷப்பிஹாக்களும் சொன்னார்கள்: ‘அல்லாஹ் அர்ஷில் தனது இடத்தை எடுத்துக்கொண்டான் (ஹால்லுன்). அர்ஷே அவனது இடம் (மகான்) ஆகும். அவன் அதன் மீது அமர்ந்திருக்கிறான்’.  அல்-அஷ்அரீ இவற்றுக்கு இடைப்பட்ட நிலையை எடுத்துச் சொன்னார்கள்: ‘இடம் என்பதே இல்லாதிருந்தபோது அல்லாஹ் இருந்தான். பிறகு அவன், தனக்கொரு இடத்தின் தேவை எப்போதும் இல்லாமலேயே, அர்ஷ் மற்றும் குர்ஸியைப் (ஆட்சியாசனம் மற்றும் பாதபீடம்) படைத்தான். இடத்தைப் படைத்த பின்னும், அதனைப் படைப்பதற்கு முன் இருந்த நிலையிலேயே அவன் இருக்கிறான்’” (நூல்: தப்யீன் கதிபல் முஃப்தரி ப.150).
      அல்-அஷ்அரீ அவர்களின் இதே நிலைப்பாட்டை இப்னு ஜஹ்பலுல் கிலாபி (இறப்பு ஹிஜ்ரி 733) அவர்களும் சொல்கிறார்கள்: “திசை குறித்து ஷைக் (அபுல் ஹசன் அல்-அஷ்அரீ) அவர்களின் கூற்று: ‘இடம் என்பதே இல்லாதிருந்த போதும் அல்லாஹ் இருந்தான். பிறகு அவன், தனக்கொரு இடத்தின் தேவை எப்போதும் இல்லாமலேயே, அர்ஷ் மற்றும் குர்ஸியைப் (ஆட்சியாசனம் மற்றும் பாதபீடம்) படைத்தான். இடத்தைப் படைத்த பின்னும், அதனைப் படைப்பதற்கு முன் இருந்த நிலையிலேயே அவன் இருக்கிறான்’” (நூல்: தபக்காத்துல் ஷஃபிய்யத்துல் குப்ரா (9:79)).
      இப்னு தைமிய்யாவின் கொள்கையை மறுத்துரைப்பதில் இப்னு ஜஹ்பல் அவர்களும் பின்வருமாறு சொல்கிறார்கள்:
      ”22. நாம் சொல்கிறோம்: அல்லாஹ் அனாதியானவன் மற்றும் எப்போதுமே இருந்து வருபவன் (கதீம் அஸலி) என்பதே எமது கொள்கை. அவன் எப்பொருளையும் போல் இல்லை; எப்பொருளும் அவனைப் போலவுமில்லை. அவனுக்கு திசையோ இடமோ கிடையாது. அவன் காலத்திற்கோ நேரத்திற்கோ கட்டுப்பட்டவன் அல்லன். எங்கே (ஐன) என்பதும் எப்போது (ஹை(த்)ஸ்) என்பதும் அவனுக்குப் பொருந்தாது. அவன் பார்க்கப்படுவான், ஆனால் முன்னோக்குதலின் ஒரு பகுதியாய் அல்ல; அல்லது முன்னோக்குதல் என்னும் அர்த்தத்தில் அல்ல (யுரா லா அன் முகாபலா வலா அலா முகாபலா). இடம் இல்லாதிருந்தபோதே அவன் இருந்தான்; அவன் இடத்தையும் காலத்தையும் படைத்தான், அவன் எப்போதுமிருந்தது போலவே இப்போதும் இருக்கிறான். இதுவே அஹ்லுஸ் சுன்னாவின் சிந்தனைப் பள்ளி (மத்ஹப்), மற்றும் சூஃபி வழியின் குருமார்களின் கொள்கை (அல்லஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக)” (நூல்: தபக்காத்துல் ஷஃபிய்யத்துல் குப்ரா 9:41)
      ”30. அபூ உத்மானுல் மக்ரீபி அவர்களின் பணியாளரான முஹம்மதிப்னு மஹ்பூப் அவர்கள் சொல்கிறார்கள்: “அபூ உத்மான ஒரு நாள் என்னிடம் சொன்னார்கள்: ‘முஹம்மதே! எவரேனும் உன்னிடம், ‘நீ வணங்கும் ஒருவன் எங்கே இருக்கிறான்?’ என்று கேட்டால் நீ என்ன சொல்வாய்?’. நான் சொன்னேன், ‘ எவ்விடத்தில் அவன் ஒருபோதும் இல்லாமலாகிவிடாமல் எப்போதும் இருக்கிறானோ, அங்கே இருக்கிறான்’ என்று சொல்வேன்’. ‘அனாதியில் அவன் எங்கே இருந்தான்? என்று அவர் வினவினால் என்ன சொல்வாய்?’ என்று அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான் சொன்னேன், ’‘இப்போது அவன் இருக்கும் இடத்தில்தான். அதாவது, இடம் இல்லாதிருந்த போதே அவன் இருந்தான். அவன் எப்போதும் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறான்’ என்று சொல்வேன்’. அபூ உத்மான் அவர்கள் எனது பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் தனது அங்கியைக் கழற்றி எனக்குப் பரிசளித்தார்கள்.” (நூல்: தகக்காத்துல் ஷஃபிய்யத்துல் குப்ரா 9:43) 

     











 ’ஷைகுல் அக்பர்’ (மாபெரும் குருநாதர்) முஹ்யுத்தீன் இப்னுல் அரபி அவர்கள் இஸ்லாமியக் கொள்கை பற்றிய அத்தியாயத்தில் தனது பெரு நூலான அல்-ஃபுத்தூஹாத்துல் மக்கியாவில் சொல்கிறார்கள்: “[144] அறிவிற் புலப்படும் எவ்வொரு ஒப்புமையும் அவனுக்கு இல்லை (லைச லஹு மித்லுன் மஃகூல்), மனங்கள் அவனை பெற்றுக்கொள்ள முடியாது. காலம் அவனைக் கட்டுறுத்துவது இல்லை. இடம் அவனைத் தாங்கவோ பெயர்க்கவோ இயலாது. ஆனால், இடம் இல்லாதிருந்தபோதே அவன் இருந்தான்; எப்போதும் இருந்ததைப் போலவே அவன் இப்போதும் இருக்கின்றான்
      ”[145] இடத்தில் அமைதலையும் (அல்-முதமக்கின்) இடத்தையும் (அல்-மகான்) அவன் படைத்தான் (அல்லது, இடத்தையும் இடத்திலமையும் அனைத்தையும் அவன் படைத்தான்), காலத்தை உள்ளமைக்குக் கொண்டுவந்தான், மேலும் சொன்னான்: “நான் ஏகன், என்றும் ஜீவிப்பவன்” (அதாவது, நீங்கள் எதுவும் எவரும் எனக்குத் தேவை இல்லை). படைப்புக்களைப் பரிபாலித்தல் அவனை எவ்வகையிலும் சோர்வுறுத்துவதில்லை. அவனை வருணிக்காத, அவனது படைப்புக்களால் கற்பனிக்கப்பட்ட எந்தப் பண்புகளும் அவனுக்குப் பொருந்தாது. (லா தர்ஜிஉ இலைஹி சிஃபாத்துன் லம் யகுன் அலைஹா மின் சுன்’அதி அல்-மஸ்னூஆத்).
      ”[146] உண்டாக்கப்பட்ட எந்தப் பொருள்களிலும் இருப்பது அல்லது அவை அவனில் இருப்பது அல்லது அவை அவனுக்குப் பின் இருப்பது அல்லது அவன் அவற்றுக்கு முன் இருப்பது என்பதை விட்டும் அவன் தூய்மையானவன். ஆனால், நாம் சொல்கிறோம்: ’அவன் இருந்தான், அவனுடன் எதுவுமே இல்லை’ (குறிப்பு: நபி(ஸல்…) சொன்னார்கள்: ‘அவனை அன்றி வேறு எதுவும் இல்லாத போதே அல்லாஹ் இருந்தான். அவனது அர்ஷ் (ஆட்சியாசனம்) நீரின் மீதிருந்தது. அவன் அனைத்தின் பதிவில் (அல்-திக்ரு) எழுதினான். மேலும் அவன் வானங்களையும் பூமியையும் படைத்தான்’ (அறிவிப்பு: இம்ரான் இப்னு ஹுசைன் அவர்களிடமிருந்து அல்-புகாரி, சஹீஹ், பாடம்: படைப்புக்களின் ஆரம்பம்). இந்த ஹதீஸின் வேறு சொற்கள் கொண்ட பிரதிகளும் உள்ளன, உதாரணமாக: கானல்லாஹு வலா ஷைஅ மஅஹு / கைரஹு / கப்லஹு – ‘அல்லாஹ் இருந்தான், அவனுடன் / அவனுக்கு வேறாக / அவனுக்கு முன் எப்பொருளும் இல்லை” (அறிவிப்பு: புரைதாவிடமிருந்து அல்-ஹாகிம் நூல்: அல்-முஸ்தத்ரக் (2:341), தரம்: சஹீஹ் (மிகச் சரியானது) – அல்-தஹபி இதனை வழிமொழிகிறார் – மேலும், இம்ரான் இப்னு ஹுசைனிடமிருந்து அல்-புகாரி; இப்னு ஹிப்பான் தமது சஹீஹில் இரு வழித்தொடர்களில் (14:7# 6140, 14:11 #6142), மற்றும் இப்னு அபி ஷைபா அவர்களின் முஸன்னஃப்). ஏனெனில் முன் (கப்ல) மற்றும் பின் (பஃத) ஆகிய சொற்கள் காலத்தின் அம்சங்களில் உள்ளது, காலமோ அவனால் படைக்கப்பட்ட ஒன்று. (நூல்: உத்மான் யஹ்யா அவர்களால் பதிப்பிக்கப்பட்ட அல்-ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா (1:164), அதன் மூன்றாம் பாகத்தில் உள்ள அத்தியாயம் “சான்றுகளை ஆராயாமலும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமலும் நம்பிக்கை கொள்ளப்பட்ட, இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளான பொதுவான அவசியக் கொள்கை பற்றி”).
      சுலைமான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் (வஹ்ஹாபிஸத்தை நிறுவியவரின் பேரன்) சொல்கிறார்: “எவரேனும், அல்லாஹ் தனது சுயத்தைக் கொண்டு (பி தாத்திஹி) எல்லா இடத்திலும் அல்லது ஓர் இடத்தில் இருக்கிறான் என்று சொல்வாரெனில் அவர் நிராகரிப்பாளர் (காஃபிர்) ஆவார். அல்லாஹ் தனது படைப்புக்களை விட்டும் விலகியவன் (பஈன்) என்றும், எப்படி அல்லது ஒப்புமை அல்லது உதாரணத்தன்மை இன்றித் தனது அர்ஷ் மீது அமைந்திருக்கிறான் என்றும் நம்புவது கட்டாயமாகும். அல்லாஹ் இருந்தான், இடம் என்பதிருக்கவில்லை. பிறகு அவன் இடத்தைப் படைத்தான். இடத்தைப் படைக்கும் முன்பு எப்போதும் இருந்தபடியே அவன் இப்போதும் இருக்கிறான்.” (நூல்: அல்-தவ்தீஹ் அன் தவ்ஹீத் அல்-ஃகல்லாக் ஃபீ ஜவாப் அஹ்லல் இராக்; 1319 / 1901, ப.34; புதிய பதிப்பு அல்-ரியாத்: தார் திபாஹ் 1984).
      அல்லாஹ்வுடன் அர்ஷும் இருந்தது என்று கூறுபவர்களை இமாம்கள் மிகக் கடுமையாக மறுத்தனர். அந்த மறுப்புரைகளுள் ஒன்று இமாம் பைஹகீ அவர்களின் “அல்-அஸ்மா வல் சிஃபாத்” என்னும் நூலிலுள்ள “படைப்பின் ஆரம்பம்” என்னும் பகுதியாகும். (குறிப்பு: அப்பகுதியிலிருந்து: “அல்லாஹ் சொன்னான் ‘அவனே முதன்முறையாகப் படைக்கிறான்; பின்பு அவனே அதை மறுமுறையும் படைக்கிறான்’ (வஹுவல்லதீ யப்தஉல் ஃகல்க்க ஸும்ம யுஈதுஹு – 30:27). அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி...) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்...) அவர்கள் சொன்னார்கள்: ‘வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்பே அல்லாஹ் அனைத்து விதிகளையும் (அல்-மகாதிர்) முன்விதித்தான் (கத்தர)’ (நூல்: திர்மிதி (தரம்: ஹசன் சஹீஹ் கரீப்) மற்றும் அஹ்மத்). இந்த ஹதீஸ் பின்வரும் வார்த்தைகளுடன் முஸ்லிம் ஷரீஃபில் பதிவாகியுள்ளது: ’அல்லாஹ் அனைத்துப் படைப்புக்களின் விதிகளையும் எழுதினான் (கதப), வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்பே, அவனது அர்ஷ் நீரிம் மீதிருந்த நிலையில் (வ அர்ஷுஹு அலல் மாஇ)’. இம்ரான் இப்னு ஹுசைன் அறிவித்தார்கள்: நபி(ஸல்...) அவர்கள் சொன்னார்கள்: ‘தன்னை அன்றி வேறெதுவும் இல்லாதிருந்த போது அல்லாஹ் இருந்தான். அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது...’. ‘தன்னை அன்றி வேறெதுவும் இல்லாதிருந்தபோது அல்லாஹ் இருந்தான்’ என்று அன்னார் கூறிய சொற்கள் அவனை அன்றி வேறு எதுவுமே இருக்கவில்லை – நீரும் இல்லை, அர்ஷும் இல்லை வேறு எதுவும் இல்லை, ஏனெனில் அவை எல்லாமே ‘அவனுக்கு வேறானவை’தாம். ‘அவனது அர்ஷு நீரின் மீதிருந்தது’ என்று அன்னார் கூறிய சொற்களின் பொருள், அதன் பின் அவன் நீரைப் படைத்தான், நீரின் மீது அவன் அர்ஷைப் படைத்தான், (அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளது போல) அதன் பின் அவன் தனது பதிவில் அனைத்துப் பொருட்களையும் எழுதினான் என்பதுதான்.”) 
      அல்லாஹ்வுடன் அர்ஷும் இருந்தது என்னும் கூற்றினை மறுத்துரைத்த இமாம்களின் மறுப்புரைக்கு இன்னொரு உதாரணம்: புகாரி ஷரீஃபிற்குத் தான் எழுதிய விரிவுரையில் இப்னு ஹஜர் அவர்கள் அதன் இருபத்தொன்றாம் அத்தியாயமான கிதாபுத் தவ்ஹீது (ஏகத்துவப் பாடம்) என்னும் பகுதியில் பின்வருமாறு எழுதுகிறார்கள்:
“அர்ஷ் பற்றிய அத்தியாயத்தை இமாம் புகாரி அவர்கள், “இவ் அத்தியாயத்தின் தலைப்பாவது: {அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது (வ கான அர்ஷுஹு அலல் மாஇ) – 11:7} {அவன் மகத்தான அர்ஷின் ரட்சகனாய் இருக்கிறான் (வ ஹுவ றப்புல் அர்ஷில் அழீம்) – 9:129}” என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இன்னனம் அவர்கள் குர்ஆனின் இரண்டு வசனங்களிலிருந்து பகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் முதல் பகுதியைச் சுட்டிய பிறகு இந்த இரண்டாம் பகுதியையும் குறிப்பிட்டிருப்பது மிகவும் நல்லது. அது, “அல்லாஹ் இருந்தான், அவனுக்கு முன் எதுவுமில்லை; அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது” என்னும் ஹதீஸைத் தவறாகப் புரிந்துகொண்டு, அர்ஷ் என்பது எப்போதுமே அல்லாஹ்வுடன் தானும் அனாதியாக இருந்துவருகிறது என்று கருதுவோருக்குத் தக்க மறுப்புரைக்கும் விதத்தில் இருக்கிறது. அவர்களின் நினைப்பு மிகவும் தவறான நிலையாகும், அர்ஷ்தான் படைப்பாளனும் உருவாக்குபவனுமாக இருக்கிறது என்று சிலர் சிந்திக்கிறார்களே அதைப் போல! அத்தகைய கொள்கை கொண்டோர், அபூ இஸ்ஹாக் அல்-ஹரவி போன்றோர், தமது வாதத்துக்கு ஆதாரமாக சுஃப்யானுத் தவ்ரி, முஜாஹித் ஆகியோரின் வழியாக இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்த ஹதீஸைக் காட்டினார்கள். அந்த ஹதீஸ்: “எதையும் படைப்பதற்கு முன் அல்லாஹ் தனது அர்ஷில் இருந்தான்; அவன் முதலில் படைத்தது எழுதுகோல்” (குறிப்பு: இந்த ஹதீஸ் துர்ருல் மன்ஸுர் என்னும் நூலில் அல்-சுயூத்தி அவர்களால் {”நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான அளவின்படியே படைத்திருக்கிறோம்” (இன்னா  குல்ல ஷைஇன் ஃகலக்னாஹு பிகதரின்) – 54:49} என்னும் திருவசனத்தை விளக்க எடுத்தாளப்பட்டுள்ளது). இந்த ‘முதலில்’ என்பது வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவற்றைப் படைத்ததைக் குறிப்பதாக அபூ இஸ்ஹாக் அல்-ஹரவி போன்றோர் விளங்கிக் கொண்டனர்.
      ”{அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது (வ கான அர்ஷுஹு அலல் மாஇ) – 11:7} என்னும் திருவசனத்திற்கான தனது விளக்கவுரையில் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் இந்த ஆட்சியாசனம் (அர்ஷ்) ஆனது வானங்களைப் படைக்கும் முன்னிருந்த அவனது படைப்பின் ஆரம்பமாகும் என்றும் அவனது அர்ஷ் செந்நிற மரகதத்தால் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். இன்னனம், {அவன் மகத்தான அர்ஷின் ரட்சகனாய் இருக்கிறான் (வ ஹுவ றப்புல் அர்ஷில் அழீம்) – 9:129} என்பதை அல்-புகாரி அவர்கள் குறிப்பிட்டிருப்பது அர்ஷ் என்பது அல்லாஹ்வின் அடிமை என்பதையும் அது அவனால் ரட்சிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது.
      ”இமாம் புகாரி தனது அத்தியாயத்தைப் பின்வரும் ஹதீஸ் கொண்டு முடிக்கிறார்கள்: “அங்கே, அர்ஷின் காலினைப் பிடித்துக்கொண்டிருப்பவராக மூசா நபியை நான் கண்டேன்” (குறிப்பு: அபூ ஹுரைரா அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது; மேலும், திர்மிதி (ஹசன் சஹீஹ்), இப்னு மாஜா மற்றும் அபூ சயீதுல் குத்ரி அவர்களின் அறிவிப்பாக புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத் ஆகிய நூற்களிலும் உள்ளது).
      ”அர்ஷுக்குக் கால்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துவது கொண்டு அது பல பாகங்கள், உறுப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டதொரு பொருள் என்பதை ஆசிரியர் நிறுவியுள்ளார். அத்தகைய எந்தவொரு பொருளும் படைக்கப்பட்டதுதான்.” (இப்னு ஹஜர் அவர்களின் சொற்கள் இங்கே முடிவுற்றன). (குறிப்பு: இப்னு ஹஜர், நூல்: “ஃபத்ஹுல் பாரி” (1959, பதின்மூன்றாம் பதிப்பு, ப.409). வேறொரு இடத்தில் (6:290#3019) இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் பல்வேறு பிரதிகளை, “அல்லாஹ் இருந்தான். அவனுடன் / அவனன்றி / அவனுக்கு முன் வேறெதுவும் இருக்கவில்லை” என்பவற்றை ஆராய்ந்து முதலில் நீரும், பின் அர்ஷும், பின்னர் எழுதுகோலும் முறையே படைக்கப்பட்டன என்பதற்கான ஆதாரமிது என்று முடிக்கிறார்கள்)
      நீரின் மீது அர்ஷ் என்பது பற்றிக்கூறும் திருவசனம் தரும் முடிவு பற்றி அல்-மூனவி பின்வருமாறு எழுதுகிறார்கள்: “அல்-தூனிஸி அவர்கள் சொன்னார்கள்: ”{அவனது அர்ஷ் நீரின் மீதிருந்தது (வ கான அர்ஷுஹு அலல் மாஇ) – 11:7} என்னும் திருவசனம் அல்லாஹ்வுக்கு திசைகள் கிடையாது, இருக்கவியலாது என்பதற்குத் தெளிவான ஆதாரம் ஆகும். ஏனெனில், அதைப்போன்றதொரு சுமை அல்லது அதனினும் பல மடங்கு குறைந்த சுமையும் கூட – நீரின் மீது தங்கியமையாது என்னும் இயற்கை நியதிக்கு முரணாக, அனைத்திலும் பெரிய சுமை (ஜிர்ம்) ஆன அர்ஷ் என்பது நீரின் மீது அமைந்தது (இஸ்தகர்ர) என்பதால், அதன் மீதான இஸ்திவா என்பதும்கூட அமைதல் அல்லது பொருந்துதல் என்பதான இஸ்திவா அல்ல என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது. (குறிப்பு: அல்-மூனவி, நூல்: ஃபைஸுல் காதிர்; அப்துல்லாஹிப்னு அம்ரிப்னுல் ஆஸ் அவர்கள் அறிவித்த ஹதீஸ் குறித்த விளக்கம்).
இறைத்தூதரின் மீதும் அன்னாரின் குடும்பத்தினர் கிளைஞர்கள் மற்றும் சகாக்கள் மீதும் இறைவனின் பேரருள் நிலவட்டுமாக.